Breaking News

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்! - சரத் பொன்சேகா

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இனியும் மௌனம் காப்பது அரசாங்கத்தின் மீதான தமிழ் மக்களின் நம்பிக்கையில் பாரிய விரிசலை ஏற்படுத்தும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சமாதான சூழ்நிலையில் தமிழ் கைதிகளை சிறையில் தடுத்து வைத்திருப்பது அர்த்தமற்ற செயல் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடை நீக்கம் நாட்டை பாதுகாக்கலாம் என தெரிவித்த அவர், அரசாங்கம் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

புலிகளை முற்றாக அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தம்மிடம் இருந்ததாக தெரிவித்த அவர், நாட்டை காப்பாற்றவும் மூவின மக்களை அமைதியாக வாழவிடவும் அந்த காரியத்தை செய்யவேண்டிய பாரிய பொறுப்பு தமக்கு இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் பயங்கரவாதம் உருவாக்கூடிய சூழல் இன்று இல்லை என குறிப்பிட்ட அவர், யுத்தம் இடம்பெற்ற காலகட்டத்தில் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் வடக்கில் பலர் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். புலிகளுடன் தொடர்புடைய ஆயுதமேந்தி போராடிய பல்லாயிரக்கணக்கான நபர்களை கைதுசெய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இதில் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருந்ததாகவும், சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளும் இருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். நேரடியாக புலிகளுடன் இணைந்து செயற்பட்ட 12 ஆயிரம் நபர்கள் மஹிந்த அரசாங்கத்தினால் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக குறிப்பிட்ட அவர், அவர்கள் சாதாரண சமூகவாதிகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைக்கவேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். தடுத்த வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவித்தால் நாட்டில் எந்தவித குழப்பங்களும் இடம்பெறப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னைய ஆட்சியாளர்கள் மீது தமிழ் மக்களுக்கு இருந்த சந்தேகம், வெறுப்புணர்வு நல்லாட்சி அரசில் இல்லை என்பது தெளிவாக புரிவதாகவும் கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும், இல்லையேல் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையில் விரிசல் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.