Breaking News

நாளை பூமியில் விழுகிறது மர்மப்பொருள் – இலங்கையின் தென்பகுதி கடலில் மீன்பிடிக்கத் தடை

விண்வெளியில் இருந்து WTF1190F என்ற மர்மப் பொருள், இலங்கையின் தென்பகுதிக் கடலில் நாளை முற்பகல் விழும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என்று நம்பப்படும், WTF1190F என்று பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள், நாளை முற்பகல், 11.50 மணியளவில் காலிக்கு அப்பால் 65 கி.மீ தொலைவில் உள்ள கடலில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்வு முடியும் வரை தென்பகுதிக் கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று ஆர்தர் சி கிளார்க் நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நிலையத்தின் விஞ்ஞானி கலாநிதி சந்தன ஜெயரத்ன கருத்து வெளியிடுகையில், “ தென்பகுதி கடற்பரப்பு நாளை காலை 10.50 மணி தொடக்கம், 12.50 மணிவரை முற்றிறலும் மூடப்பட்டிருக்கும்.

மீனவர்களும் ஏனையவர்களும் அந்தப் பகுதி கடலில் பயணிக்க வேண்டாம் என்று கேட்கப்படுகின்றனர். அந்தப் பகுதி வான்பரப்பும், இந்த நிகழ்வு முடியும் வரை தடை செய்யப்பட்டிருக்கும் என்று அறியப்படுகிறது. எனினும், இந்த மர்மப்பொருள் புவியின் வளிமண்டலப் பகுதிக்குள் நுழையும் போது, எரிந்து விட வாய்ப்புள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.