Breaking News

மீண்டும் வாக்குறுதியை மீறியது இலங்கை அரசு – அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை

தீபாவளிக்கு முன்னதாக- முதற்கட்டமாக 32 அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதாக, வழங்கியிருந்த வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் காப்பாற்றத் தவறியுள்ளது.

நேற்று- நவம்பர் 9ஆம் நாள், 32 அரசியல் கைதிகளை பிணையில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கடந்த வாரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதன் பின்னர், நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், 32 அரசியல் கைதிகள் முதற்கட்டமாக, நேற்று விடுதலை செய்யப்படுவர் என்று அறிவித்திருந்தார். எனினும், நேற்று எந்தவொரு அரசியல் கைதியையும் பிணையில் விடுவிக்க  அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இது அரசியல் கைதிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த 7ஆம் நாளுக்குள் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக, வழங்கியிருந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தம்மைப் பொதுமன்னிப்பில் விடுவிக்க வேண்டும் எனக் கோரி அரசியல் கைதிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.