Breaking News

தடைசெய்யப்பட்ட புலம்பெயர் அமைப்புகள் பற்றிய மீளாய்வு அறிக்கை இம்மாதம் கையளிப்பு

விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்றும், தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்றும், இலங்கையின் முன்னைய அரசாங்கத்தினால் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட பட்டியல் மீளாய்வு செய்யப்படுவதாக இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.


விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் என்று, 16 புலம்பெயர் அமைப்புகளையும். தீவிரவாதத்துக்கு ஆதரவளித்தனர் என்ற 400 தனிநபர்களையும், மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடை செய்தது.ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 தீர்மானத்துக்கு அமைய, இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பெயர்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

தடை செய்யப்பட்ட இந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பட்டியல் பாதுகாப்பு அமைச்சினால் மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த மீளாய்வு அறிக்கை இந்தமாதம் வெளிவிவகார அமைச்சிடம் கையளிக்கப்படும் என்றும் இலங்கை பாதுகாப்புச் செயலர் தெரிவித்துள்ளார்.

இது புலம்பெயர் அமைப்புகள், தனிநபர்கள் மீதான தடையை நீக்குவதற்கான முன்னோடி நடவடிக்கை என்று கருதப்படுகிறது.கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் இடம்பெற்றிருந்த 16 அமைப்புகள், 400 தனிநபர்களின் விபரங்களை வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து, பாதுகாப்பு அமைச்சு மீளாய்வு செய்து வருவதாகவும், இலங்கை பாதுகாப்புச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பட்டியல் தொடர்பாக, பாதுகாப்பு அமைச்சு விரிவாய் ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும், வெளிவிவகார அமைச்சு இந்த தடையை நீக்குவது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்க முன்னர் இந்த மீளாய்வு அறிககை இம்மாதம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ள தனது வலையமைப்புகளின் மூலம், அவர்களின் வலையமைப்பு, நிகழ்வுகள், சம்பவங்களில் தொடர்புடையவர்கள் பற்றிய தகவல்களை பாதுகாப்பு அமைச்சு சேகரித்து வருவதாகவும், இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, புலம்பெயர் தமிழர்களுடனான தொடர்புகள், மற்றும் அவர்களிடம் இருந்து தகவல்களை பெறும் விவகாரங்களை வெளிவிவகார அமைச்சே கையாளவுள்ளது என்றும், அவர் மேலும் கூறியுள்ளார்