இன்று ஜனாதிபதியை சந்திக்கிறார் வடக்கு முதல்வர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பொன்று இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இச் சந்திப்பில் வடமாகாண அமைச்சர்களான ப.சத்தியலிங்கம், டெனிஸ்வரன், பொ.ஐங்கர நேசன், குருகுலராஜா ஆகியோரும் பங்கேற்கவுள்ளனர். குறித்த சந்திப்பின்போது வடமாகாண அபிவிருத்தி மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் நாடாளவிய சிறைச்சாலைகளில் பயங்கரவாதச்சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யும் விடயம் தொடர்பில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன் முழுமையாக தலையீடு செய்ய வேண்டுமென வடகிழக்கில் வாழும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரியுள்ளனர்.
அந்தக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல்வேறு வாக்குறுதிகளுடன் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் கடந்த மாதம் 12ஆம் திகதி எமது உறவுகள் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியின் அடிப்படையில் கடந்த 17ஆம் திகதி அப்போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டிருந்தனர்.
எனினும் ஜனாதிபதியின் வாக்குறுதிக்கு அமைவாக கடந்த ஏழாம் திகதி வரையில் எவரும் விடுதலை செய்யப்பட்டிருக்காத நிலையில் மீண்டும் நாடாளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எமது உறவுகள் உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது அண்மைய காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுக்கே பிணை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், விசாரணைகளின்றி உள்ளவர்கள், தண்டனையளிக்கப்பட்டவர்கள், மேன்முறையீடு செய்யப்பட்டவர்கள் எனப் பலர் காணப்படுகின்றனர். அவர்களின் விடுதலை தொடர்பாக எந்தவிதமான உத்தரவாதங்களும் வழங்கப்படவில்லை.
ஒவ்வொரு தடவையும் எமது உறவுகள் உண்ணாவிரதமிருப்பதும் வாக்குறுதிகள் வழங்கப்படுவதும் சாதரணமாக நடைபெறும் விடயம் போன்றாகிவிட்டது. ஆகவே வடக்கு மக்களின் ஆணைபெற்றவராகவிருக்கும் தாங்கள் (வடமாகாண முதலமைச்சர்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போது உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை எடுத்துக் கூறுவதுடன் இவ்விவகாரத்திற்கு நிரந்தர தீர்வொன்றை பெறுவது தொடர்பாக அவரிடத்தில் வலியுறுத்தலைச் செய்யவேண்டுமெனக் கோரியுள்ளனர்.