Breaking News

சோபித தேரரின் இறுதி நிகழ்வு இன்று

மறைந்த வண.மாதுளுவாவே சோபித தேரரின் இறுதி நிகழ்வு இன்று பிற்பகல் இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் முழுமையான அரச மரியாதைகளுடன் நடைபெறவுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காலமான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அழைப்பாளர் வண. மாதுளுவாவே சோபித தேரரின் உடல், கொழும்புக்கு எடுத்து வரப்பட்டு மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அவரது உடலுக்கு அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள் , பொதுமக்கள் என்று ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோட்டே சிறி நாகவிகாரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மாதுலுவாவே சோபித தேரரின் உடலுக்கு நேற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் 12 மணி வரை அவருக்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்த முடியும்.

பிற்பகல் 1.30 மணிக்கு சோபித தேரரின் உடல் நாடாளுமன்ற மைதானத்தை நோக்கி ஊர்வலமாக செல்ல ஆரம்பிக்கும். இறுதி நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்ட 1900 காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இறுதி நிகழ்வு நடைபெறும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் மகா சங்கத்தினருக்காக 5 ஆயிரம் ஆசனங்களும், மிகமுக்கிய பிரமுகர்களுக்காக 4 ஆயிரம் ஆசனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி, பிரதமர் , அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர். வெளிநாட்டு தூதுவர்களுக்காக 44 ஆசனங்கள் இங்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களும் கலந்து கொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, இன்று இலங்கையில் துக்கநாளாக பிரகடனம் செய்யப்பட்டிருப்பதால் அரச நிறுவனங்களில் தேசியக்கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறும் வீடுகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் மஞ்சள் கொடியை பறக்கவிடுமாறு இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மதுபானம், இறைச்சி விற்பனை நிலையங்கள், திரையரங்குகள் என்பன இன்று மூடப்பட்டிருக்கும்.