Breaking News

13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் : செல்வம் எம்.பி கோரிக்கை

காணி பொலிஸ் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு பகிரப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்திற்கு அமைய மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் முழுமையாக பகிரப்பட வேண்டும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலாதன் சபையில் கோரிக்கை விடுத்தார்.

மேலும் 19ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாடாளுமன்றத்தைப் பலப்படுத்தியதைப் போன்று மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்கி, அங்குள்ள அமைச்சர்களுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கி மாகாண சபைகளையும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, கடந்த அரசாங்கம் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த தவறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளதுடன் 13ஆவது திருத்தச் சட்டத்திலுள்ள சில பிரிவுகளை கடந்த அரசாங்கம் 18 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் ஊடாக நீக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.