டக்ளஸ் மீதான வழக்கில் 18 பேருக்கு அழைப்பாணை
இலங்கையின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கை தனியாகப் பிரித்து விசாரிக்கக் கோரிய வழக்கில், 18 சாட்சிகளுக்கு நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப இந்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை சூளைமேடில் 1986ஆ-ம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், வழக்குரைஞர் திருநாவுக்கரசு என்பவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக டக்ளஸ் தேவானந்தா உட்பட 9 பேர் மீது சூளைமேடு பொலிஸார் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த நிலையில், 1993-இல் டக்ளஸ் தேவானந்தா தலைமறைவானார்.
இதனால், அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, பிணையில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது.இந்தநிலையில், இந்தியாவுக்கு வந்தால் தனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லாததால் காணொலிக் காட்சி மூலம் (வீடியோ கான்பரசிங்) ஆஜராக அனுமதிக்கக் கோரி டக்ளஸ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து, அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், "காணொலிக் காட்சி மூலம் மனுதாரர் ஆஜராகலாம். நீதிமன்றம் கருதினால், நேரில் ஆஜராக வேண்டும். அப்போது போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்´ என உத்தரவிட்டது.
இந்த நிலையில், சென்னை மாவட்ட 4-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், தேவானந்தா மீதான வழக்கை தனியாக பிரித்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று காவல் துறை சார்பில் கோரப்பட்டது.இதன்பேரில், வழக்கில் தொடர்புடைய 18 சாட்சிகளும் 2016 ஜனவரி 18-ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.








