Breaking News

சிறைத்தண்டனையுடன் புனர்வாழ்வு பெறுவதற்கு தமிழ்க் கைதிகள் மறுப்பு

குறுகிய கால சிறைத்தண்டனையின் பின்னரான ஒருவருட புனர்வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழ் அரசியல் கைதிகள் நேற்று மறுப்புத் தெரிவித்துள்ளனர். 

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப் பட்டிருந்த ஐந்து தமிழ் அரசியல் கைதிகளுக்கு குறுகிய கால சிறைத் தண்டனையின் பின்னர் ஒருவருட புனர்வாழ்வு வழங்குவதற்கு வவுனியா உயர்நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியிருந்தது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமைய அவர்கள் அனைவரையும் புனர்வாழ்வுக்கு அனுப்ப முடியும் என நீதிமன்றம் கூறியிருந்தது.

எனினும், தாம் ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்திருப்பதால், மீண்டும் ஒருமுறை குறுகியகால சிறைத் தண்டனையின் பின்னர் புனர்வாழ்வுக்குச் செல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறியுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளான வடலகே அஜித், குலசிங்கம் கோகுலராஜ், தயாபரன், காத்திரகேசு நாதன் மற்றும் சூரியகாந்த் ஜெயச்சந்திரன் ஆகியோருக்கே ஒருமாத கால குறுகிய சிறைத் தண்டனையின் பின்னர் ஒருவருட புனர்வாழ்வுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

வடலகே அஜித், குலசிங்கம் கோகுராஜ் ஆகிய இருவரும் ஏற்கனவே நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டு இரண்டு வருடங்களாக பிணையில் உள்ளனர். அதேபோல தயாபரன் மற்றும் நாதன் ஆகியோர் தாம் ஏற்கனவே பல வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

சூரியகாந்த் ஜெயச்சந்திரனுக்கு எதிராக அநுராதபுரம் நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு இருப்பதால் குறுகியகால சிறைத் தண்டனையின் பின்னரான புனர்வாழ்வுக்குச் செல்ல விருப்பமில்லையெனக் கூறியுள்ளார். புனர்வாழ்வு பெற்றுச் செல்வதற்கு விருப்பம் தெரிவித்த தமிழ் அரசியல் கைதிகளை படிப்படியாக புனர்வாழ்வுக்கு அனுப்புவதாக அரசாங்கம் உறுதிமொழி வழங்கியிருந்தது.

இந்த நிலையில் முதற்கட்டமாக 20 பேரை அனுப்பவிருப்பதாக அறிவித்திருந்தது. இருந்தபோதும் ஏற்கனவே பலதடவைகள் சிறைத்தண்டனை அனுபவித்த தமக்கு மீண்டுமொருமுறை சிறைத்தண்டனை வழங்கி அதன் பின்னர் புனர்வாழ்வுக்கு அனுப்புவதை ஏற்றுகொள்ள முடியாது எனக் கூறி ஐவரும் புனர்வாழ்வை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.