Breaking News

குரோதப் பேச்சுக்குத் தண்டனை விதிக்கும் சட்டமூலத்தை விலக்குமாறு கூட்டமைப்பு கோரிக்கை

இனவாதம், மதவாதம் போன்றவற்றைத் தூண்டும் வகையில், குரோதமாகப் பேசுவதை குற்றமாகப் பிரகடனம் செய்யும் சட்டத்திருத்தத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

குரோதப் பேச்சுகளுக்குத் தண்டனை விதிக்கும் வகையில், குற்றவியல் திருத்தச் சட்டமொன்றை சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

இந்த சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது என்றும், அரசியலமைப்பின் 14ம் சரத்தில், கூறப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரம் இந்த புதிய சட்டத்தின் மூலம் முடக்கப்படுவதாகவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

1887ம் ஆண்டு குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்யும் வகையில், இந்த புதிய திருத்தச்சட்ட யோசனையை நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.

ஆனால், புதிய திருத்தச்சட்டயோசனை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவிற்கு அமைவான வகையிலேயே காணப்படுகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் இரண்டாவது பிரிவைப் பயன்படுத்தி , கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் மக்களை கடந்த கால அரசாங்கங்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தி வந்தன.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழேயே, ஊடகவியலாளர் ஜே.எஸ். திசநாயக்கத்துக்கு 20 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், மத்திய மாகாணசபை உறுப்பினர் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நடவடிக்கைகள் கடந்த காலங்களில் அனைத்துலக அளவில் கண்டனங்களை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், இதனையொத்ததாக, குற்றவியல் சட்டத்தின் ஓர் பிரிவாக குரோதப் பேச்சு குறித்த சட்டம் அறிமுகம் செய்யப்படுவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக எதிர்க்கிறது.

நாட்டின் அனைத்து குடிமக்களினதும் கருத்து, பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்து, அனைத்துலக தரத்திலான பயங்கரவாத எதிர்ப்பு சட்டமொன்று அறிமுகம் செய்பய்பட வேண்டுமென, சிறிலங்காவும் இணை அனுசரணை வழங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் கருத்து, பேச்சு மற்றும் ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.