Breaking News

நீந்திக்கடந்த நெருப்பாறு – அங்கம் – 27

வானொலிப் பெட்டியை எடுத்துவருவதற்காகச் சுந்தரம் பாலம்பிட்டிக்குப் போய்ச் சேர்ந்த போது ஊர் வெறிச்சோடிப்
போய்க்கிடந்தது. எந்த ஒரு போராளியையோ, படையினரையோ கூடக் காணக்கிடைக்கவில்லை. அங்கு நிலவிய மயான அமைதி அவனை அச்சமடைய வைத்தது.

போர் இடம்பெற்று முடிந்த இரத்தம் இன்னும் காய்ந்து விடாத எத்தனையோ களங்களுக்கு எத்தனையோ தடவைகள் போராளிகளுக்கு உதவியாகப் போய் வந்திருக்கிறான்.அப்போதெல்லாம் பயம் அவனை நெருங்கியது கிடையாது. ஆனால் தான் பிறந்து வளர்ந்த வீடு, ஊர் என்பனவே அவனை மனித ஜீவன்கள் காணப்படாத வெறுமையால் மிரட்டிக் கொண்டிருந்தன.

முற்றத்துப் பாலையில் எந்தநேரமும் கலகலத்துக் கொண்டிருக்கும் குருவிகளைக்கூடக் காணக்கிடைக்கவில்லை. வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே போய் வானொலிப் பெட்டியைத் தேடி எடுத்து தோளில் கொழுவிக் கொண்டான்.

வெளியே, ‘ம்மா’, என்ற குரல் கேட்டு ஓடிந்தான். அது அவர்களின் செங்காரிப் பசுவின் குரல் தான்.

அந்த அழைப்புக் கூட பலவீனமாகக் கேட்பதாகவே அவனுக்குத் தோன்றியது. அவனைக் கண்டதும் அது மெல்ல அசைந்துவந்து அவனின் கையை நக்கியது. அதன் பார்வை, “என்னைவிட்டிட்டு போக உங்களுக்கு என்னண்டு மனம் வந்தது?’, எனக் கேட்பது போலிருந்தது.

அவன் மெல்ல அதன் தலையை வருடிக்கொடுத்தான். திடீரென சற்றுத் தொலைவில் கேட்ட அதிரவைக்கும் வெடியோசையும் அதையடுத்துக் கேட்ட கிபிர் விமானத்தின் பேரோசையும் அவனைத் திகைக்க வைத்துவிட்டன.

ஏற்கனவே அவர்கள் தயார்ப்படுத்தி வைத்திருந்த பதுங்குகுழிக்குள் ஓடிப்போய் படுத்துக்கொண்டான். இரு விமானங்களும் எட்டுக் குண்டுகளைப் போட்டுவிட்டு வானில் மறைந்த பின்பு அவன் பங்கரை விட்டு வெளியே வந்து பார்த்தான்.

செங்காரிப் பசுவின் பால்குடிக் கன்று வேலிக்கரையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தது. செங்காரி கத்திக் கொண்டு அதனைச் சுற்றிச் சுற்றிவந்தது. அருகே சென்று பார்த்தான். கன்று இன்னமும் சாகவில்லை. அதை என்ன செய்வது என அவனால் தீர்மானிக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் மீண்டும் எறிகணை வீச்சு தொடங்கிவிட்டது. அவனுக்கு சிந்திக்க நேரமிருக்கவில்லை. அப்படியே கன்றை கட்டிப்பிடித்து தூக்கியவாறு பதுங்குகுழியில் இறக்கிவிட்டான். எறிகணைத் தாக்குதல் ஓய ஏறக்குறைய மூன்று மணித்தியாலங்கள் கடந்துவிட்டன.

அது வரை தனது உயிர் பற்றிய அச்சத்தில் தவித்த அவன் எறிகணை வீச்சு முற்றாக நின்றவிட்டதென்பதை உறுதி செய்த பின் கன்றை புரட்டிப்பார்த்தான். அது இறந்துவிட்டிருந்தது.

அதைத் தூக்கி வெளியே போட்டுவிட்டு அவன் தானும் மேலேறி வந்தான். எப்படியாவது மாட்டையாவது கொண்டு செல்லும் எண்ணத்துடன் அதன் கழுத்துக் கயிற்றைப் பிடித்து இழுத்தான். அது கன்றை விட்டு வர மறுத்து முரண்டுபிடித்தது.

வேறு வழியின்றி சைக்கிளை எடுத்துக் கொண்டு பெரியமடு நோக்கி வேகமாக மிதிக்க ஆரம்பித்தான். பரமசிவத்துக்கும் முருகரப்புவுக்கும் பின்னால் சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்த சுந்தரத்தைக் கண்டதும் பார்வதி ‘ஓ’ வென அலறிவிட்டாள். “எங்கை மோனை காயம்?”, எனக் கேட்டு அவனின் மேனியெங்கும் தடவ ஆரம்பித்தாள்.

முத்தம்மா அழுகையை அடக்க முடியாமலும் அவனருகில் போய் விசாரிக்கவும் முடியாமலும் தவித்தாள். இப்போ சுந்தரத்தின் களைப்பு ஓரளவுக்கு குறைந்துவிட்டது.

அவன், “எனக்கு காயமில்லையம்மமா.. எங்கடை கண்டுக்குட்டி செத்துப் போச்சுது.. இது அதின்ரை இரத்தம்”, என்றான்.

அவன் நடந்தவற்றை நாலுவரியில் சொல்லிமுடித்தான். “மிச்சத்த பிறகு கதைப்பம்.. நீ போய் முதல் குளிச்சிட்டு வா”, என்றவாறே பார்வதி வேறு ஒரு சாரத்தை எடுத்து நீட்டினாள்.

அவன் அதை வாங்கிக் கொண்டு குளத்தை நோக்கி நடந்தான். அவனுக்குப் பின்னால் போய் அவனுடன் கதைக்க வேண்டும் போன்ற ஒரு தவிப்பு முத்தம்மாவுக்கு ஏற்பட்ட போதும் அதை அவள் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள். ஆனால் அவன் சவர்க்காரம் கொண்டுபோகவில்லை என்பது நினைவுக்கு வரவே அவள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த முடிவு செய்தாள்.

“அம்மா.. அவர் சவர்க்காரத்தைக் கொண்டு போகேல்ல. உடுப்பெல்லாம் இரத்தமெல்லே?”, எனக் கேட்டாள் அவள். “கொண்டு போகேல்லயே… பிள்ளை நல்லாய் பதகளிச்சுப் போனான்.. அதைக் கொண்டு போய்க் குடுத்திட்டு ஓடி வா”, என்றாள் பார்வதி.

தன் எண்ணம் சுலபமாக நிறைவேறிய மகிழ்ச்சியுடன் அவள் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு குளத்தை நோக்கிப் போனாள். குளக்கரைக்கு அவள் வந்த போது அவன் தண்ணீருக்குள் இறங்கிவிட்டான். “அம்மா.. சவர்க்காரம் தந்துவிட்டவா”, என எட்டி அவனிடம் நீட்டினாள் அவள். “கொண்டா..”, என அவன் கையை நீட்டிய போது எட்டாமல் இருக்கவே, இறங்கித் தாவன்”, என்றான்.

அவன் சவர்க்காரத்தை வாங்கி உடலில் தேய்த்தவாறே கேட்டான். இண்டைக்கு பசுக்கண்டுக்கு பட்ட குண்டுத் துண்டு எனக்குப் பட்டு நான் செத்திருந்தால் நீ என்ன செய்திருப்பாய்?” “என்ன அழுவிக்கிறதில உங்களுக்கு பெரிய சந்தோஷமே?” அவளின் குரல் தளதளத்தது.

“அப்பிடியில்லை.. ஒரு கதைக்கு கேட்டன்” அவள் ஒரு பெருமூச்சுடன் சொன்னாள்.. “ம். கழட்டிப்போட என்னட்ட தாலி கிடக்கே.. பொட்டை அழிக்கக் குங்குமமே வைச்சிருக்கிறன்” அவனால் எதுவும் பேச முடியவில்லை.

சில வினாடிகளின் பின்பு, பாலம்பிட்டி போனவுடன் முதல் வேலை உனக்குத் தாலி கட்டுறது தான்”, என்றான். “போவமே?”, அவள் ஏக்கத்துடன் கேட்டாள். “ஓம். போவம்!”, அவன் குரல் உறுதியால் கனத்தது. முருகேசர் கொண்டுவந்த கௌபி தான் எல்லோருக்கும் அன்றைய இரவு உணவாகியது.

கௌபியை அவித்து அதற்குள் வெங்காயம், செத்தல் மிளகாய் என்பவற்றைத் தாளித்து பார்வதி நல்ல சுவையான உணவாக்கியிருந்தாள். நடுவில் விறகைத் தீ மூட்டிவிட்டு அனைவரும் சுற்றியிருந்து சாப்பிட்டனர். முருகருக்கு தங்கு வேட்டைக்குப் போகும் நாட்களில் காட்டில் இரவு உணவு சாப்பிடும் நினைவு வந்தது.

போகப் போகக் காட்டுக்கும், கிராமத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடுமோ என்ற எண்ணமும் அவருக்கு எழுந்தது. ஆனால் அவர் காட்டு மிருகங்களுக்குப் பயப்பிட்டதில்லை. ஆனால் கந்தகக் குண்டுகளுக்கு எப்பிடிப் பயப்படாமல் இருக்க முடியும்? சாப்பிட்ட பின்பு எல்லோரும் புதினம் கேட்பதற்காகச் சுந்தரத்தைச் சுற்றிக் கூடிவிட்டனர்.

அவனும் சலிப்பில்லாமல் தான் அங்கு போய்ச் சேர்ந்தது முதல் திரும்பி வரும்வரை நடந்தவற்றை ஒன்றும்விடாமல் சொல்லி முடித்தான். கதிரேசர் ஆவலுடன், “தம்பி, ஆமி.. எங்கையாம் நிக்கிறாங்கள்?, எனக் கேட்டார்.

“அதைப் பற்றி எனக் கொண்டும் தெரியாது.. ஆனால் எங்கடை ஆக்களின்ர செல்லுகள் தட்சிணாமருதமடுவிலையிருந்து தான் வெளிக்கிட்டு பண்டிவிரிச்சான் பக்கமும் முள்ளிக்குளம் பக்கமும் போகுது. ஆனபடியாலை ஆமி அதுக்க தான் நிக்கவேணும்” “எங்கடை பொடியளும் நல்லாய் செல்லடிக்கிறாங்களே?” போராளிகள் நிறைய செல்லடித்தால் இராணுவம் அச்சத்தில் திரும்பிப் போய்விடும் என்பது கதிரேசரின் நம்பிக்கை.

“ஓ.. வெளுத்து வாங்கிறாங்கள்”, என்றான் சுந்தரம். ஆனால் அவர்கள் நினைப்பது போன்று இலகுவான காரியமாக இருப்பதில்லை. ஒரு சிறு தாமதம் கூடப் பல போராளிகளின் உயிர்களைப் பறிப்பதுடன் ஆட்டிலறிகளையும் சிதறடித்துவிடும். ஒரு இடத்திலிருந்து ஆட்லறி ஏவப்பட்டால் ஒரு சிறிது நேரத்தில் அதே மையத்தில் எதிரியின் எறிகணை வந்துவிழும்.

அவ்வளவு தொழில் நுட்ப வசதிகள் எதிரிகளிடம் உள்ளன. எனவே ஆட்டிலறியை ஏவியதும் உடனடியாகவே அதைக் கழற்றி இடமாற்றம் செய்யவேண்டும். அதைத் தூக்கிக் கொண்டு ஓட போராளிகள் இருவர் தேவை. அதன் அடித் தட்டைத் தூக்கிக் கொண்டு ஓட நான்கு பேர் வேண்டும். சற்றுப் பிந்தினால் கூட போராளிகளும் இல்லை. ஆட்டியும் இல்லை! ஐந்து இஞ்சிப் பீரங்கி என்றாலும் கூட இரண்டு சில்லு வண்டியில் வைத்து உருட்டி உருட்டி இடம்மாற்றி தாக்குதல் நடத்தவேண்டும்.

அவற்றைக் கூட கண்மூடித்தனமாக அடித்துவிட முடியாது. ஏற்கனவே, “வேவு” அணி போராளிகள் எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு இரகசியமாக உட்புகுந்து ‘பிக்ஸ்’ அடிப்பார்கள். அப்பணியிலும் போராளிகள் உயிரிழப்பதற்கான அபாயங்கள் உள்ளன. அந்த இலக்கை வைத்து போராளிகளின் எறிகணைகள் துல்லியமாக தாக்குதல் நடத்தும். குறைந்த வசதிகளுடன் எல்லா வசதிகளும் கொண்ட எதிரிகளுடன் மோத எவ்வளவு உழைப்பும் தியாக உணர்வும் தேவை என்பதை கதிரேசு, முருகேசர் போன்றோர் அறிந்திருப்பதில்லை.

முருகர் ஓரளவுக்குப் போராளிகளின் சிரமங்களை அறிந்திருந்தார். அதனால் தானோ என்னவோ போராளிகளை யாரும் குறை சொன்னாலோ அல்லது எல்லாம் வல்ல மந்திரவாதிகள் போல் கதைத்தாலோ அவருக்குக் கோபம் வந்துவிடும்.

“கதிரேசு.. பொடியள் எங்களைக் காப்பாத்த உயிரைப் பணயம் வைச்சு சண்டை பிடிக்கிறாங்கள். நீ சும்மா இதிலை இருந்து பல்லி சொல்லாத” என்றார் முருகர்.

கதிரேசு தலையை சொறிந்தவாறே”, ஏன் இப்ப கோவிக்கிறாய்? எங்கடை பொடியள் வெல்ல வேணுமெண்டு ஆசைப்பட்டால் பிழையே?”, என்றார்.

“நல்லாய் ஆசைப்படு” என்றுவிட்டு எழுந்தார் முருகர். ஒரு வாரகாலமாக களநிலைமை வெகு இறுக்கமாகவே இருந்தது. பண்டிவிரிச்சான் பக்கமாகவோ, முள்ளிக்குளம் பக்கமாகவோ, பரப்புக்கடந்தான் பக்கமாகவோ ஏதோ ஒரு முனையை உடைத்து முன்னேறப் படையினர் முயன்று கொண்டிருந்தனர்.

போராளிகளின் கடும் எதிர்புக் காரணமாக படையினரால் ஒரு அடி கூட முன் நகர முடியவில்லை. ஆனாலும் ஒவ்வொரு நாளும் இரண்டு, மூன்று போராளிகள் வீரச்சாவடைந்து கொண்டிருந்தனர்.

பண்டிவிரிச்சான் முன்னரங்கம் சிவத்தின் பொறுப்பிலேயே விடப்பட்டிருந்தது. பெண்கள் அணியின் ஒரு பகுதியினரும் சிவத்தின் பொறுப்பிலேயே களத்தில் நின்றனர். இராணுவம் எந்த ஒரு முனையை உடைக்க விட்டாலும் போராளிகள் சுற்றி வளைக்கப்படும் அபாயம் ஏற்படும் என்பதை சிவம் நன்குணர்ந்திருந்தான்.

எனவே காவல் நிலைகளை அதி உயர் விழிப்பு நிலையில் வைத்திருந்தான். எனினும் இந் நிலையைத் தொடர்ந்து தக்க வைக்க முடியாதாகையால் அவன் ஒரு, ஊடுருவல் தாக்குதலுக்கோ அல்லது ஒரு அதிரடி நடவடிக்கைக்கோ கட்டளைக்காகக் காத்திருந்தான்.

அந்த நிலையில் தான் சிறப்புத் தளபதியிடமிருந்து சிவத்துக்கு அவசர அழைப்பு வந்தது.

-தமிழ்லீடருக்கு அரவிந்தகுமாரன்-

(தொடரும்)

நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 01
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 02
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 03
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 04
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 05
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 06
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 07
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 08
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 09
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 10
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 11
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 12
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 13
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 14
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 15
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 16
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 17
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 18
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 19
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 20
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 21
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 22
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 23
நீந்திக்கடந்த நெருப்பாறு - அங்கம் - 24