Breaking News

அரசியல் கைதிகளை விடுவிப்பதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப் போவதில்லை

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கமும் புலித்தலைவர்களை விடுதலை செய்தது. சிறைகளில் இருக்கும்
சாதாரண அரசியல் கைதிகளை விடுதலை செய்வதால் முன்னால் ஜனாதிபதியும் நாடளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கோ  நாட்டுக்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படப் போவதில்லையென நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படுத்தும் அமைப்பு நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,

சிறைச்சாலைகளில் மீதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதால் முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் நிலவுவதாக இன்று பெருமளவில் பேசப்படுகின்றது. சிறைச்சாலைகளில் இருக்கும் இந்த கைதிகளில் யுத்தத்துக்கு முன் சிறு சிறு குற்றங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றனர். என்றாலும் இவர்களில் எவரும் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தில் தலைமைப் பதவிகளில் இருந்ததாக எங்கும் பதிவாகி இல்லை. அந்த இயக்கத்தில் சாதாரண குற்றவியல் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட வேலைகளில் கைது செய்யப்பட்டவர்களாவர். மாறாக ஓர் அமைப்பில் உயர் பதவிகளை வகித்து செயற்பட்டவர்களல்ல.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி புலிகள் அமைப்பின் பிரதான தலைவர்களை விடுவித்தார். தற்போது சிறைகளில் இருப்பது தலைவர்களின் கட்டளைகளின் பிரகாரம் குற்றச் செயல்களில் ஈடுபட்ட வேளையில் கைது செய்யப்பட்டவர்களும் புலி சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களுமாவர். அத்துடன் ஓர் அமைப்பில் கூடுதலாக பொறுப்பு கூற வேண்டியது அவ்வமைப்பின் தலைவர்களாகும். மாறாக தலைவர்களின் சொற்படி நடப்பவர்களல்ல. ஏன் என்றால் தலைவர்கள் தான் சகலவிதமான செயல்களையும் திட்டமிட்டு கட்டளையிடுகின்றவர்கள். எனவே எல்.ரி.ரி.ஈ. தலைவர்களை விடுதலை செய்து விட்டு அவர்களின் கட்டளையின் பிரகாரம் செயற்பட்ட மீதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் மஹிந்த மற்றும் கோத்தாபய ராஜபக் ஷவினர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை.

அத்துடன் அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் நன்மைகள் இருப்பது போன்று ஒரு சில துறையினருக்கு பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகலரும் பாகுபாடு இன்றி வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதாரவாக வாக்களித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். என்றாலும் அரச சேவையாளர்களின் சலுகைகள் குறைக்கப்பட்டிருப்பதால் வைத்தியர்கள் உட்பட அரச சேவை மேலதிகாரிகள் விரக்தியடைந்துள்ளனர். 

இன்று நாட்டுக்கு கிடைக்க இருக்கும் வரி வருமானம் கிடைப்பதில்லை. அதன் சட்டங்கள் அமுல்படுத்துவதில்லை. அதனால் 10 வீதமான வரி வருமானமே கிடைப்பதாக மத்திய வங்கி ஆளுனர் குறிப்பிடுகிறார். எனவே அரசாங்கம் வரி வருமான சட்டத்தை நடைமுறைப்படுத்தி நாட்டுக்கு கிடைக்க வேண்டிய சகல வரிகளையும் அறவிட வேண்டும். அத்துடன் அரச சேவையாளர்களுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளையும் குறைவின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.