Breaking News

தொலைபேசிகளை இனாமாக வழங்கி பெண்களை துஷ்பிரயோகிக்கும் அவலம்

வன்னியில் வலோத்காரமாக கையடக்கத் தொலைபேசிகள் இளம் விதவைப் பெண்களிடம் இனாமாகக் கொடுக்கப்பட்டு அப்பெண்கள் சிலரின்
சந்திப்புக்காக அழைக்கப்படும் அவலம் நடைபெறுவதாக வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறையிட முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.சமூக செயற்பாட்டு மையம நடாத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நிகழ்வு நேற்று காலை பத்து மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கைத்தொலைபேசிகள் பாதுகாப்புக்காகக் கொடுக்கப்படுகின்றனவாம். அவற்றை இயக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகக் கேள்வி. பயிற்றப்பட்ட பின் சந்திப்பிடங்களுக்குச் சரசமாட அழைக்கப்படுகின்றார்கள். போகாதிருக்க முடியாது. போய்வந்து பொலிசுக்கு முறைப்பாடு செய்ய முடியாது. முறைப்பாடுகள் ஏற்கப்படாதாம். இன்றைய நிலை இது. நாங்கள் எங்கள் இளைய சமுதாயத்தினரையும் பெண்களையும் காப்பாற்ற வேண்டிய ஒரு காலகட்டமாக இன்றைய காலம் பரிணமித்துள்ளது. எனவே தான் நான் செல்லும் இடங்களிலெல்லாம் இவ் விடயங்கள் பற்றியும் மாணவ சமுதாயத்தை எதிர்நோக்கும் சவால்கள் பற்றியும் அவர்கள் மீது ஆசிரியர்களும் பெற்றோரும் காட்ட வேண்டிய அன்பையும் அனுசரணையையும் பற்றிப் பேசி வருகின்றேன்.

எம் முன் விரிந்து கிடப்பதோ பூதாகரமான ஒரு பிரச்சனை. இதனை நாம் விரைந்து முடிவுக்கு கொண்டுவராவிடின் எமது இளைய சமுதாயமும் பெண் வர்க்கத்தினரும் இங்கு பாதுகாப்புடன் வாழ முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படக் கூடும். ஏற்பட்டுள்ளது என்று கூடக் கூறலாம். எனவே அன்பார்ந்த பெற்றோர்களே,மதிப்பார்ந்த பெண் சகோதரிகளே பாடசாலை மாணவ மாணவியர்களே, குழந்தைகளே நீங்கள் யாவரும் மிகவும் விழிப்புடன் இருங்கள். குழந்தைகளின் நடவடிக்கைகள் தொடர்பில் எல்லோரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அவர்களின் செயல்களில் மாற்றங்கள் தெரிகின்ற போது விரைந்து செயற்பட்டு அவர்களை அழிவுப் பாதையில் இருந்து மீட்டெடுங்கள்.

அன்பார்ந்த குழந்தைகளே! நீங்கள் இனந்தெரியாதவர்கள், அன்னியர்களுடன் பழகுவதை இயலக்கூடியளவு தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களுடன் இனிக்க இனிக்க பலர் பேச முற்படுவர். புதிய பதார்த்தங்களை உண்ணத் தருவார்கள். தேவையற்ற ஆபாசக் காட்சிகளை உங்கள் முன் வைக்க முற்படுவார்கள். இவை எல்லாவற்றிலுமிருந்து தப்பிக் கொண்டு கல்வியையே கண்ணாகக் கொண்டு முன்னேற வேண்டியது உங்கள் பொறுப்பு. கல்வியில் கூடிய சிரத்தை எடுத்தீர்களானால் இவ்வாறு அறிமுகப்படுத்தப்படுகின்ற இந்த மாயைகள் அனைத்தும் கானல் நீர் போல மறைந்துவிடுவன. எம்மனங்களில் மாண்பானது மலர்ந்தால் மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை நாம் மட்டித்து விடலாம்.

ஆகவே வன் எண்ணங்களை நாம் நம் மனதில் இருந்து முதலில் விரட்டியடிப்போம். வலோத்காரத்திற்கு வித்திடும் வக்கிர வஸ்துக்களைப் புறந்தள்ளுவோம். வளமான எதிர்காலத்தை நாம் அமைக்க வேண்டுமானால் அதில் பெண்கள் கண்ணியமான ஒரு இடத்தைப் பெற வேண்டும். கண்ணியமாகப் பெண்கள் நடாத்தப்பட வேண்டும். நடைமுறையில் பெண்களுக்கெதிராக நடந்து கொள்வதானது வன்புணர்வு, வன்செயல், பாலியல்த் தொல்லைகள், பெண்சிறுமிகளைத் தவறாகப் பயன்படுத்தல் போன்ற பலதையும் உள்ளடக்கிய செயல்களாக அமைந்துள்ளன. இவற்றை நீக்கி பெண்களைப் பெருமையுடனும் பெறுமதியுடனும் நடத்தலாம் என்ற எண்ணத்தை நாங்கள் எம் மக்களிடையே பரப்புவது அவசியம்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்க முடியும் என்பதை நாம் ஏற்க வேண்டும். மனதில் இருந்து முதலில் தவறான எண்ணங்கள் களையப்பட வேண்டும். எம்மைப் பெற்ற தாய்மார்களைப் போன்றவர்களே பெண்கள் என்ற எண்ணம் எம்மிடையே தலைதூக்க வேண்டும். பெண்களைக் கண்ணியமாக நடத்தினால் வாழ்வு வளம்பெறும், வருங்காலம் சிறப்பாக அமையும் என முதலமைச்சர் தெரிவித்தார்.