Breaking News

மாவீரர்களின் இலட்சியத்தினை சுமந்தவாறு கூடுகின்றது நாடுகடந்த தமிழீழ அரசு

தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை
எனும் ஈழத்தமிழ் மக்களது அரசியற் பெருவிருப்பின் சனநாயக வடிவமாக திகழும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது தவணைக்காலத்தின் நான்காவது நேரடி அரசவை அமர்வு நியு யோர்க்கிலும் லண்டனிலும் கூடுகின்றது.

எதிர்வரும் நவம்பர் 4ம் நாள் வெள்ளிக்கிழமை தொடங்குகின்ற அரசவை அமர்வு மூன்று நாள் கூட்டத் தொடராக இடம்பெற இருப்பதாக நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைச் செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய அமர்வு இடம்பெற, அதனோடு தொழில்நுட்ப பரிவர்தனைவழி இணைந்த துணை அமர்வு லண்டனில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன், பிரான்ஸ், அமெரிக்காவினைச் சேர்ந்த பல அனைத்துலக சட்டவாளர்கள், இந்தியாவில் இருந்து பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பேராசிரிகள்; நேரடியாக இந்த அமர்வில் பங்கெடுக்க இருக்கின்றனர். புலம்பெயர் தேங்களில் இருந்தும் நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள், மேற்சபைப் பிரதிநிதிகள் இவ்விரு இடங்களிலும் கூடுகின்றனர்.

உலக்தமிழர்களின் பலத்தினை கட்டியெழுப்புதல், ஈழத் தமிழர்களுக்கான அனைத்துலக நீதி ஆகிய விடயங்களை மையப்பொருளாக கொண்டு கூடுகின்ற இந்த அரசவை அமர்வில், நா.தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள், அமைச்சரவை மற்றும் மையங்களின்அறிக்கைகள், நிர்வாக அலுவல்கள் என பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவாதங்களும் கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற இருக்கின்றன.