சர்வதேச நாடுகளை ஏமாற்றவே யாழில் தேசிய பொங்கல் விழா - கஜேந்திரன்
மைத்திரி அரசாங்கம் தமிழ் மக்களுடன் நெருங்கி செயற்பட்டு தமிழர்களை சிறப்பாக பராமரித்து வருகின்றது என்ற போலியான தகவல்களை வெளிநாடுகளுக்கு வழங்குவதற்காவே, தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிடுகின்றார்.
மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் யாழப்பாணத்தில் தேசிய பொங்கல் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
‘200 இற்றும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் இன்னும் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் விடுதலைச் செய்யப்படாமல் தொடர்ச்சியாக சிறைகளில் வாடுகின்றனர்.
அதுமாத்திரமன்றி தமிழ் இளைஞர் யுவதிகள், பெண்கள், குழந்தைகள் என 20 ஆயிரம் பேர் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போயுள்ளனர்.
இலங்கை இராணுவத்தினர் தமிழர்களின் நிலங்களை பலவந்தமாக கையகப்படுத்தி, ஆக்கிரமித்து இராணுவ முகாம்களையும், பாதுகாப்பு அரண்களையும் அமைத்துள்ளது.யாழ்ப்பாண மக்கள் மிகவும் கவலையுடன் வாழந்து வரும் இவ்வாறான ஒரு நிலையில், யாழ்ப்பாணத்தில் தேசிய பொங்கல் விழா அவசியம் தானா?.
தேசிய பொங்கல் விழாவினை யாழப்பாணத்தில் நடத்தி வடக்கில் பிரச்சினை இல்லை தேசிய பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் நடத்தும் அளவிற்கு இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளது என்று சர்வதேச நாடுகளுக்கு காண்பிப்பதற்காகவே இவ்வாறு செய்கின்றனர்’ என்றும் கூறினார்.








