தமிழர்களுக்கு தனிநாடு வேண்டாம் : அரசாங்கத்திடம் சரணடைந்தார் சம்பந்தன் (காணொளி இணைப்பு)
வடக்கு கிழக்கு தமிழர்கள் இனி தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்க மாட்டார்களெனவும், இலங்கையில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான அரசியல் தீர்வே சிறந்ததெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே, எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.
அத்துடன், அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை நல்லாட்சி அரசாங்கம் முன்வைக்கவேண்டுமென சம்பந்தன் கேட்டுக்கொண்டார். இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது அணியினரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, மஹிந்த இந்நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவரென குறிப்பிட்ட சம்பந்தன், நாட்டு மக்களின் மனநலனை கருத்திற்கொண்டு அவர் சாதகமான முடிவை எடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். இன்றைய விவாதத்தில் மஹிந்த கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு மக்கள் காலம் காலமாக கோரிவரும் சுயாட்சி முறை பற்றி தமது உரைகளில் வழமையாக உரம் சேர்த்துவரும் சம்பந்தன், இன்றைய உரையில் சுயாட்சி பற்றிய எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.








