சூழ்ச்சித் திட்டங்களின் காரணமாகவே மஹிந்த தோற்றார் - பசில்
புதிய அரசியல் கட்சியொன்று உருவாவது தவிர்க்க முடியாது என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.1947ம் ஆண்டு எஸ்.எடபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு வெளியேறிச் செல்ல நேரிட்ட சமூக அரசியல் பின்னணி தற்போதும் உருவாகியுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் புதிய அரசியல் கட்சியொன்றின் உருவாக்கம் தவிர்க்கப்பட முடியாததாகும். மஹிந்த ராஜபக்ஷ போராடி வெற்றியீட்டிய ஒருவராவார்.அரசியல் சூழ்ச்சித் திட்டங்களின் காரணமாக மஹிந்த அதிகாரத்தை இழக்க நேரிட்டது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜே.வி.பி ஆதரவாளர்கள் விரக்தியடைந்திருப்பதாக அண்மையில் பசில் ராஜபக்ஷ, பி.பி.சி செய்தி சேவைக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்தார். இது தொடர்பில் குறித்த கொழும்பு ஊடகம் பசில் ராஜபக்சவிடம் வினவிய போது புதிய அரசியல் கட்சி உருவாக்கம் பற்றி பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த வாரத்தில் புதிய அரசியல் கட்சியொன்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.
எனவே, ராஜபக்ஷசர்களின் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்று உருவாக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவ்வாறு உருவாக்கப்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவடைவதனை தவிர்க்க முடியாது எனவும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.








