Breaking News

இலங்கையின் சுதந்திரநாளை ‘கரிநாளாக’ அனுஸ்டிக்க தீர்மானம்! (அறிக்கை இணைப்பு)

இலங்கையின் சுதந்திரநாளை வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிப்பதாக ‘கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்கள்’ அறிவிப்பு! 

பெப்ரவரி 4, இலங்கையின் 68வது சுதந்திரதினத்துக்கு இன்னும் ஒருவாரகாலம் உள்ள நிலையில் அந்நாளை, தமிழ்மொழி பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடங்களான வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ‘கரிநாளாக’ அனுஸ்டிக்க உள்ளதாக கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் வடக்கு கிழக்கு மாகாண சங்கங்கள் இன்று (28.01.2016) அறிவித்துள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் பிரதிநிதிகள் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் கூடிக்கலந்தாலோசித்து குறித்த முடிவை அறிவித்துள்ளன.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் இலங்கை அரசாங்கமானது, ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்கள் தொடர்பில் ‘பொறுப்புக்கூறல் மற்றும் பரிகாரநீதி’ வழங்கல் செயல்பாட்டு முன்னெடுப்புகளை இன்றுவரையும் இதயசுத்தியுடன் மேற்கொள்ளாத நிலைமைகளை கண்டித்தும் – வலியுறுத்தியும்,

இலங்கையின் 68வது சுதந்திர தினமாகிய பெப்ரவரி 4 அன்று, வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் சமநேரத்தில் கறுப்பு பட்டியணிந்து காலையிலிருந்து மாலை வரை அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தவுள்ளதாகவும், நாடு முழுக்கவும் சிறைச்சாலைகளுக்குள் உள்ள தமிழ் அரசியல் கைதிகளும் சமநேரத்தில் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினரிடம் தமது உறவுகளை ஒப்படைத்த கண்கண்ட சாட்சிகளாகவும், பொலிஸ் மற்றும் முப்படைகளும் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக தமது உறவுகளை வலிந்து கூட்டிச்சென்றதை நேரில் கண்ட உறவுகளாகவும் தாங்கள் உள்ளதாகவும்,

இராணுவத்தின் எந்தப்பிரிவிடம்? எந்த அதிகாரியிடம்? அல்லது எந்த இராணுவச்சிப்பாய்யிடம்? எந்த இடத்தில்? எச்சந்தர்ப்பத்தில்? எப்போது தமது உறவுகளை கையளித்தோம்? அல்லது தமது உறவுகளை எங்கு? எப்படி? எப்போது? அழைத்துச்சென்றனர்? என்பதை தம்மால் மிகத்தெளிவாக கூறவும் – அடையாளம் காட்டவும் முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள்,

இந்த நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருப்பதற்கான மறுதலிக்க முடியாத வகையிலான ஆதாரங்கள் உள்ளதாகவும், ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர் குழுவும் – கண்காணிப்புக்குழுவும், இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் இதனை உறுதிசெய்துள்ளனர் என்றும், அவ்வாறாயின்…

 தமது உறவுகள் இதுநாள் வரையும் எந்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்?

 அந்த இரகசிய முகாம்கள் இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டன?

 அந்த இரகசிய முகாம்களை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்?

 கையளிக்கப்பட்ட, கைதுசெய்யப்பட்ட, கடத்தப்பட்ட தமது உறவுகளை சித்திரவதைகளுக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்கள் யார்?

 சர்வதேச போர் நியமங்களையும், மனித உரிமைப் பிரகடனங்களையும் மீறி தமது உறவுகளை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை?

 மனிதத்துவத்துக்கு எதிரான இவ்வாறான வன்முறைகள் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள் எவ்வாறானவை?

தொடர்பில் தமக்கு துரிதமானதும், நீதியானதுமான பதிலை, பொறுப்புக்கூறலை தெரிவிக்குமாறும்,

குறித்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பற்றிய தமது உறவுகளின் பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

கூடவே, காணாமலாக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் இறந்திருக்கலாம் என்றால், ‘அவ்வாறு இறந்தவர்கள் யார்? எஞ்சியிருப்போர் எங்கிருக்கின்றார்கள்?’ என்பது பற்றியும் உடனடியாக பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும் என்றும் வலியுறுத்தி,

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாக ஜனாதிபதி மைத்திபால சிறிசேன அவர்களுக்கு கையொப்பமிட்டு மகஜர் ஒன்றையும் இன்று (28.01.2016) அனுப்பி வைத்துள்ளனர்.

மகஜரின் முழுவிவரமும் இணைக்கப்பட்டுள்ளது.


மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்கள்,
ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு,
இலங்கை.

ஊடாக,

கௌரவ இரா.சம்பந்தன் அவர்கள்,
தலைவர்,
தமிழ் தேசியக்கூட்டமைப்பு,
வடக்கு கிழக்கு மாகாணங்கள்.


ஜனாதிபதி அவர்களே!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ‘ஆட்கடத்தல் மற்றும் தடுத்துவைத்தல்’ சம்பவங்களினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இருபது ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் அன்றாட வாழ்வை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் நகர்த்திக்கொண்டு வருகின்றோம்.

இவ்வாறான எமது குடும்பங்களில் பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன. அத்தகைய குடும்பங்களை சேர்ந்த அங்கத்தவர்கள் கல்வி, சுகாதாரம், உணவு, உடை, பராமரிப்பு, பாதுகாப்பு, தொழில், பொருளாதாரம் என்று நாளாந்த அத்தியாவசிய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத அவலநிலையில் துன்பப்பட்டுக்கொண்டிருப்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள் என்று நம்புகின்றோம்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ‘அவசரகால தடைச்சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம்’ ஆகியவற்றை முற்றுமுழுதாக வரமுறைகளுக்கு அப்பால் பயன்படுத்தி, சோதனைச் சாவடிகளிலும், வீடுகளிற்கு நேரடியாக வருகைதந்தும், சுற்றிவளைப்புகளின் போதும் சந்தேகத்தின் பெயரில் எமது வாழ்க்கைத் துணைவர்களையும், பிள்ளைகளையும் கைதுசெய்து, பொலிஸ் மற்றும் முப்படைகளும் தம்மோடு வலிந்து அழைத்துச் சென்றிருந்தன. மக்கள் நடமாட்டம் நிறைந்த வீதிகளிலும், மக்கள் ஒன்றுகூடும் பொதுஇடங்களிலும் பலர் பார்த்திருக்க வெள்ளைவான்களிலும் கடத்திச்சென்றிருந்தனர்.

2009ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்கால் பகுதியில் யுத்தம் உக்கிரகட்டத்தை அடைந்திருந்தவேளை உயிரைக்கையில் பிடித்தவாறு இராணுவத்தின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் கடல்நீரேரியூடாக வட்டுவாகல் பாலத்தை அடைந்தோம். அதனை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பாரிய சோதனைச் சாவடியினை கடந்து செல்வதற்காக நீண்ட வரிசையில் முட்கம்பிகளுக்கிடையில் காத்துக்கொண்டிருந்தபோது,

அவ்விடத்தில் இராணுவத்தினரின் பகிரங்கமான வேண்டுகோளுக்கும் வாக்குறுதிக்கும் அமைவாக, விரும்பியோ விரும்பாமலோ தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் ஈடுபட்டிருந்த எமது உறவுகளை அருட்தந்தை ஜோசப் பிரான்சிஸ் ஆண்டகையின் முன்னிலையில் கையளித்திருந்தோம். அதன்பின்னர் எமது உறவுகளை இராணுவத்தினர் பேருந்துகளில் ஏற்றிச்சென்றதை எமது கண்களாலே பார்த்துக்கொண்டிருந்தோம்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு ஏழு வருடங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், மேற்படியான சந்தர்ப்பங்களில் பொலிஸ் மற்றும் முப்படைகளாலும் வலிந்து அழைத்துச்செல்லப்பட்ட எமது உறவுகளை ஒரு தடவையேனும் சந்திப்பதற்கு கூட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? என்பது பற்றிய தகவலை அறிந்துகொள்வதற்கான அடிப்படை உரிமை கூட மறுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது உறவுகளை தேடிக்கண்டறிவதற்காக நாங்கள் நடத்தாத ஜனநாயக போராட்டங்கள் இல்லை. கோரிக்கை விடுக்காத மனித உரிமைகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் இல்லை, அரசியல் சார்ந்த உள்@ர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் இல்லை.

இராணுவத்தினரிடம் எமது உறவுகளை ஒப்படைத்த கண்கண்ட சாட்சிகளாகவும், பொலிஸ் மற்றும் முப்படைகளும் சந்தேகத்தின் பெயரில் விசாரணைக்காக எமது உறவுகளை வலிந்து கூட்டிச்சென்றதை நேரில் கண்ட உறவுகளாகவும் நாங்கள் உள்ளோம்.

இராணுவத்தின் எந்தப்பிரிவிடம்? எந்த அதிகாரியிடம்? அல்லது எந்த இராணுவச்சிப்பாய்யிடம்? எந்த இடத்தில்? எச்சந்தர்ப்பத்தில்? எப்போது எமது உறவுகளை கையளித்தோம்? அல்லது எமது உறவுகளை எங்கு? எப்படி? எப்போது? அழைத்துச்சென்றனர்? என்பதை எம்மால் மிகத்தெளிவாக கூறவும், அடையாளம் காட்டவும் முடியும்.

முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இதுவரையில் 23ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகளை தெரிவித்து சாட்சியங்களையும் பதிவு செய்துள்ளோம். ஆயினும் எமது உறவுகள் எங்கே? அவர்கள் எங்கே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? என்பது பற்றிய எமது தேடல்களுக்கு, நியாயமான கோரிக்கைகளுக்கு இன்னும் தீர்வு தரப்படவில்லை.

இதனால் நாங்கள் உள்நாட்டு செயல்முறைகளிலும், உள்நாட்டு ஆணைக்குழுக்களிலும் நம்பிக்கை இழந்தவர்களாகவே உள்ளோம்.

இம்மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள், ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் இறந்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகமுள்ளன. அவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது என்பது எனக்குத் தெரியாது’ என்று அசாதாரணமாக கூறியுள்ளமையானது மீளாத்துயரிலிருக்கும் எமக்கு மிகுந்த மனஉளைச்சலையும் வலியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நாட்டில் இரகசிய முகாம்கள் காணப்பட்டிருப்பதற்கான மறுதலிக்க முடியாத வகையிலான ஆதாரங்கள் உள்ளன. ஐக்கியநாடுகள் சபையின் நிபுணர் குழுவும் – கண்காணிப்புக்குழுவும், இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளும் இதனை உறுதிசெய்துள்ளனர். அவ்வாறாயின்…

 எமது உறவுகள் இதுநாள் வரையும் எந்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்?
 அந்த இரகசிய முகாம்கள் இலங்கையின் எந்தெந்த பகுதிகளில் செயல்படுத்தப்பட்டன?
 அந்த இரகசிய முகாம்களை நிர்வகித்துக்கொண்டிருந்தவர்கள் யார்?
 கையளிக்கப்பட்ட, கைதுசெய்யப்பட்ட, கடத்தப்பட்ட எமது உறவுகளை சித்திரவதைகளுக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்கள் யார்?
 சர்வதேச போர் நியமங்களையும், மனித உரிமைப் பிரகடனங்களையும் மீறி எமது உறவுகளை படுகொலை செய்தவர்களுக்கு என்ன தண்டனை?
 மனிதத்துவத்துக்கு எதிரான இவ்வாறான வன்முறைகள் குற்றங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘நீதி மற்றும் இழப்பீடுகள் என்ன?

என்பவை பற்றியெல்லாம் எமக்கு மிகத்தெளிவாக பொறுப்புடன் பதிலளிக்க வேண்டும்.

குறித்த இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு ‘சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுக்கொண்டிருந்தோர், படுகொலை செய்யப்பட்டோர், அவர்களில் எஞ்சிப்பிழைத்திருப்போர்’ பற்றிய எமது உறவுகளின் பெயர் விவரங்கள் இதயசுத்தியுடன் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

கூடவே, காணாமலாக்கப்பட்டவர்களில் பெருமளவானோர் இறந்திருக்கலாம் என்றால், ‘அவ்வாறு இறந்தவர்கள் யார்? எஞ்சியிருப்போர் எங்கிருக்கின்றார்கள்?’ என்பது பற்றியும் உடனடியாக பகிரங்கப்படுத்தப்படல் வேண்டும்.

மேற்குறித்த எமது நியாயமான கோரிக்கைகளுக்கு, ஜனநாயக பண்புகளை மதித்து நல்லாட்சியை முன்னெடுப்பதற்கு முழுமனதுடன் முயற்சித்துக்கொண்டிருக்கும் தங்களிடமிருந்து துரிதமானதும், நீதியானதுமான பதிலை, பொறுப்புக்கூறலை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

-நன்றி-

இப்படிக்கு,

கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்கள் – வடக்கு கிழக்கு மாகாணங்கள்

28.01.2016