Breaking News

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச தலையீடுகள் இருக்காது

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீடுகள் இருக்காது என்றும், உள்ளக விசாரணையே முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன.

கொழும்பில் நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன-

”போரின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டை விசாரணைகளின் மூலம் கண்டறிய நாம் தாயாராக உள்ளோம். கடந்த காலத்தில் விட்ட எமது அரசாங்கம் தவறுகளை விடாது. உண்மைகளை கண்டறிவதிலும் அதே சந்தர்ப்பத்தில் எமது இராணுவம் மீதான கறையை நீக்குவதிலும் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையிலும் செயற்படும்.

இருந்தாலும் இந்த விசாரணைகள் முழுமையாக உள்ளக விசாரணைப் பொறிமுறையாகவே இருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இந்த விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டில் உள்ளனர்.

நாட்டை அனைத்துலக தரப்பிடம் விற்கவோ அல்லது எமது இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் வகையில் செயற்படவோ நாம் தயாராக இல்லை. எனினும் இந்த விசாரணைகளின் மூலமாக அனைத்துலக தரப்பை திருப்திப்படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

அதேபோல கடந்த காலத்தில் இருந்த இலங்கை தொடர்பான அனைத்துலக நிலைப்பாடும் மாறியுள்ளது. அதற்கு எமது அனைத்துலக ஒத்துழைப்பும் அவர்களுடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்த வாக்குறுதியுமே காரணம்.இப்போது உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையில் அனைத்துலக கண்காணிப்புகள் மற்றும் அவர்களின் அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வதற்கு நாம் தயாராக உள்ளோம்.

அனைத்துலக சட்ட உதவிகளை பெறுவதாயின் எவ்வாறான வகையில் அவற்றை கையாள்வது என்பது தொடர்பிலும் நாம் ஆராய உள்ளோம்.

ஆனாலும் இலங்கையின் சட்டங்கள், இவ்வாறான உண்மைகளை கண்டறியும் செயற்பாட்டிற்கு போதுமானதாக அமையும் என்பதே எமது நிலைப்பாடு.எமது நாட்டிலும் நிபுணத்துவம் வாய்ந்த – அனுபவம் மிக்க சட்ட அறிஞர்கள் உள்ளனர். அவர்களை எம்மால் பயன்படுத்த முடியும்.

அனைத்துலக ஆலோசனைகளுடன் அவர்களின் கண்காணிப்பிலான உள்ளக விசாரணையே நடைபெறும்.இது அனைத்துலக தலையீடு அல்ல. இரண்டிற்கும் இடையிலான வித்தியாசத்தை கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்தார்.