Breaking News

சிவா பசுபதிப்பிள்ளையின் முடிவு விக்னேஸ்வரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வுத்திட்டம் தயாரிக்கும் உபகுழுவில் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பினை இலங்கையின் முன்னாள் சட்டமா அதிபரும் அரசியலமைப்பு நிபுணருமான சிவா பசுபதிப்பிள்ளை நிராகரித்தார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் வசிக்கும் சிவா பசுபதிப்பிள்ளை தனிப்பட்ட பயணமொன்றினை மேற்கொண்டு நேற்றய தினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தார். அவரது பயணம் தனிப்பட்ட பயணம் எனவும் அவர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அழைப்பினையேற்று இங்கு வரவில்லையெனவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் வந்திருந்த சிவா பசுபதிப்பிள்ளையிடம் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டக் குழுவில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்தார்.இலங்கையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக முயற்சிகள் பல நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, தமிழர் பேரவை போன்றதொரு தனியான அமைப்புத் தேவையில்லை என தான் நினைப்பதாக சிவா பசுபதிப்பிள்ளை தெரிவித்த அதேவேளை தனக்கான அழைப்பினையும் நிராகரித்துவிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் தற்போது தமிழ் மக்களின் ஒற்றுமைதான் அவசியம் எனவும் தெரிவித்தார்.சிவா பசுபதிப்பிள்ளையின் இந்த முடிவு விக்னேஸ்வரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது.சிவா பசுபதிப்பிள்ளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு 3 மாதங்களிற்கு முன்னரே திட்டமிட்டிருந்ததாகவும் அவரது பயணம் அரசியல் நோக்கமற்ற தனிப்பட்ட பயணமே எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.