Breaking News

எங்கே போகிறது தமிழரசுக்கட்சி

தமிழ் அரசியல் தளத்தில் அண்மையில் மிகவும் தாக்கம்
செலுத்துவது தமிழ் மக்கள் பேரவை என்பது சிங்கள தரப்புக்களிடம் மட்டுமல்ல தமிழ்த் தரப்பிலும் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு வருகின்றது.

தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களின் பேராதரவுடன் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு தமிழ்த் தரப்புக்களால் நட்லாட்சி என்று சொல்லப்பட்ட ஆட்சியில் தமிழ் மக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட எந்த முன்னேற்றமும் ஏற்றடவில்லை.

இந்த நிலையில் தான் முன்னர் செயற்பாட்டிலிருந்த தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகள் பொது அமைப்புக்கள் மற்றும் சில அரசியல்வாதிகளின் ஒத்துழைப்போடு வடக்கு முதலமைச்சரின் ஒப்புதலையும் பெற்று ஆரம்பிக்கப்பட்டதே தமிழ் மக்கள் பேரவையாகும். இந்த பேரவையின் தோற்றம்,தேவை என்பன தொடர்பிலும் சற்று விரிவாக ஆராய்வதே இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவைக்கு ஆரம்பமான காலத்தில் ஆதரவு அலையைவிட எதிர்ப்பு அலை பல வழிகளிலும் பேரவைக்கு கிடைத்திருக்கிறது. இவ்வாறான நிலையில்தான் அதன் இயங்கு நிலை தொடங்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பு அலையானது முக்கியமாக மூன்று வழிகளில் தோற்றம் பெற்றிருக்கிறது

1.முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கெதிரான தனிப்பட்ட எதிர்த் தரப்பு

2.தேர்தலில் தோல்வியுற்ற கஜேந்திரகுமார்,சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான தரப்புக்கள்.

3.பேரவை ஆரம்ப வைபவம் மிகவும் இரகசியமாக நடைபெற்றதால் பேரவை ஆரம்பிக்கமுன்னரே அதனை வலப்படுத்தவோ பலவீனப்படுத்தவோ முடியாமல்போன தரப்புக்கள்

இனி சற்று விரிவாகப்பார்ப்போம்

1.முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கெதிரான தனிப்பட்ட எதிர்த் தரப்பு

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தனிப்பட்ட தரப்பு என்ற வகைக்குள் பெரும்பாலானவர்கள் தமிழரசுக் கட்சி என்ற வட்டத்திற்குள் அடங்குகின்றார்கள். குறிப்பாக அவர்கள் சம்பந்தனால் அடுத்த தலைவராக சுட்டிக்காட்டப்பட்ட சுமந்திரனின் நோக்கு நிலையில் இருந்து சிந்திப்பவர்களாக காணப்படுகின்றனர்.

இதில் இன்னொரு தரப்பு த.தே.கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனைவிட மாவை மற்றும் சுமந்திரனின் சுட்டுவிரலில் இயங்கும் தரப்புக்களாகவே காணப்படுகின்றனர். இதில் வேடிக்கையான இன்னொருவிடயமும் காணப்படுகின்றது அதாவது இதுவரைகாலமும் வடமாகாணசபைக்கு கீழ் இயங்கிவந்த உள்ளூராட்சி மன்றங்களான நகரசபை,பிரதேசசபை தலைவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருந்த சிலர் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்ட நிலையில் அடுத்த தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.

முன்னர் மாகாண சபை தொடர்பிலும் முதலமைச்சர் தொடர்பிலும் புகழ்ந்துவந்த அதே தரப்புக்கள் விக்கினேஸ்வரன் எதிர் சுமந்திரன் தரப்பாக பிரிந்தபோது பலரும் சுமந்திரனின் பக்கத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதே உண்மை. இதில் எதற்காக அவர்கள் சுமந்திரனை தேர்ந்தெடுத்தார்கள் என்ற கேள்வி வெளியிலிருந்து பார்க்கும் சிலருக்கு ஏற்படலாம் உண்மை என்னவெனில் மாவை,சுமந்திரன் ஆகியோரே உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட இருப்பவர்களை தேர்ந்தெடுக்கப்போகின்றவர்கள்.

எனவே அவர்கள் தற்போது நேரடியாகவே தமது பிரதேசங்களில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு சுமந்திரனையோ அல்லது மாவையையோ அல்லது இன்னொரு பாராளுமன்ற உறுப்பினரையோ அழைத்து அவர்களை புகழ்ந்துபேசி அவர்களின் சிபார்சினை எதிர்பார்க்கின்றார்கள். ஆதலால் அவர்கள் தீவிரமாக முதல்வரையும் த.ம.பேரவையையும் விமர்சித்தும் வருவதோடு நின்றுவிடாது தத்தமது முகநூலிலும் கடுமையான பிரச்சார வேலைகளை தீவிரப்படுத்தி அதனை பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் பகிர்ந்துகொண்டு தமக்கான புள்ளிகளை அதிகரித்துவரும் தரப்பாக காணப்படுகின்றனர்.

2.தேர்தலில் தோல்வியுற்ற கஜேந்திரகுமார்,சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு எதிரான தரப்புக்கள்

இந்த தரப்பில் காணப்படுபவர்களில் முக்கியமான தரப்பாக தமிழரசுக்கட்சி சார்பாக இருக்கின்றபோதும் சிலர் வெளியிலும் உள்ளார்கள். அவர்கள் தேர்தல்லில் தோல்வியுற்ற தரப்பாக இவர்களை நோக்குவதோடு அவர்கள் தோற்றதும் தமிழ் மக்களுக்கான அரசியலிலிருந்து ஒதுங்கவேண்டும் என்றும் எதிர்பார்க்கும் எண்ணத்துடன் உள்ளவர்களாவர்.

உண்மையிலேயே அவர்களின் எண்ணத்தின்படி பார்த்தால் 1983 செப்ரெம்ரில் பதவியிழந்த சம்பந்தன் 18 ஆண்டுகளின் பின்னர் மூன்று தேர்தல் தோல்விகளை கடந்து 2001இல் மீண்டும் அந்த பாராளுமன்ற கனவை எட்டிப்பிடித்திருக்க முடியாது என்பதும் அந்த இலக்கை எட்டிப்பிடித்ததனாலேயே இன்று தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியாக கருதப்படும் த.தே.கூட்டமைப்பின் தலைவராகவும் சிறீலங்காவின் எதிர்க்கட்சி தலைவராகவும் வரமுடிந்துள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

எனவே முதலமைச்சர் கூறியதுபோல வெற்றி தோல்விகளுக்கப்பால் கொள்கைப்பிடிப்பும் மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்கும் தன்மையுடன் பொது நோக்கம் குறித்த சிந்தனையில் உள்ளவர்கள் யாரும் தமிழர்களுக்கான பணியினை செய்வதற்கு தடையில்லை என்பதோடு அவர்களின் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அரசியல் தலைமைகளுக்கு வரவேண்டும்.

3.பேரவை ஆரம்ப வைபவம் மிகவும் இரகசியமாக நடைபெற்றதால் பேரவை ஆரம்பிக்கமுன்னரே அதனை வலப்படுத்தவோ பலவீனப்படுத்தவோ முடியாமல்போன தரப்புக்கள்

இதில் முதலாவது தரப்பு தேர்தல் காலங்களில் ஆதிக்கம் செலுத்தினாலும் இந்த மூன்றாம் தரப்பு யாரென நோக்கினால் பேரவை இரகசியமாக ஆரம்பமானதால் இதில் கனக்க இசகுபிசகு இருப்பதாக முதல்தரப்பாக முந்திகொண்டது ஊடகத்தரப்பே. இதில் முதல் கட்டமாக மக்கள் மத்தியில் கொண்டுசென்ற ஊடகங்கள் பேரவை தொடர்பில் தமக்கு ஏற்றால் போல தலைப்புக்களை இட்டு மக்கள் மத்தியில் பேரவையின் மீது வசைபாட முற்பட்டுள்ளனர்.

இதில் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்ததும் குறிப்பாக அந்த பத்திரிகை போர்க்காலத்தில் தேசியத்திற்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாக அப்போது பேசப்பட்டிருந்ததும் ஒரு காரணமாகும். ஆனால் அந்த பத்திரிகையாசிரியர் தமிழரசு கட்சியின் மிகமுக்கிய பாராளுமன்ற உறுப்பினரின் நெருங்கிய உறவினர் என்பது இந்த ஊடக பரப்பில் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மறுபக்கத்தில் பார்த்தால் குறித்த பத்திரிகையாசிரியரும் தனது பத்திரிகை ஆண்டுவிழாவில் அந்த செய்தியை வெளியிடவேண்டுமென திட்டமிட்டே அந்த நிகழ்வை முதல்நாளில் நடாத்துவதற்கு திட்டமிட்டாரா என்ற கேள்வியும் எழுகின்றது.

அத்தோடு இந்த ஊடகப்பரப்பு யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை பொறுத்தவரை அவர்கள் பார்வையில் எந்த நிகழ்வு நடைபெற்றாலும் அந்த நிகழ்வு மண்டபத்திற்குள் தம்மையும் அனுமதிக்க வேண்டும் என்ற ஒரு வரையறையை எதிர்பார்த்துள்ளவர்களாக மாறியுள்ளார்கள். ஆனால் இதே தரப்பு அடுத்தவாரம் கொழும்பில் நடைபெற்ற சம்பந்தன் விக்கினேஸ்வரனுக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் புகைப்படங்களே வெளிவரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதைய ஊடகவியலாளர்களில் பலர் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் தேசியத்திற்கு எதிராகவும் தமிழ்த் தரப்பு செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்துவரும் தரப்புக்களும் காணப்படுகின்றார்கள் என்பதையும் இவர்கள் அறிந்திருக்க வேண்டும். நல்லாட்சி என்று சொல்லப்படும் இவ்வாட்சியில் எவ்வாறு கூட்டமைப்பை சிதைக்க வேண்டும் தமிழர்களின் ஒற்றுமையை எவ்வாறு குலைக்க வேண்டுமென பேரினவாதம் திட்டமிட்டதோ அதற்கு துணைபோவவர்களாகவும் சிலர் மாறியுள்ளனர்.

அந்த திட்டமிடலில் ஓரளவு வெற்றியையும் பெற்றுக்கொண்ட ரணில் தற்போது மேலும் ஒரு படிபோய் முக்கியமாக மூன்று செய்திதளங்களின் பிரதம ஆசிரியர்கள் கொழும்பை வந்தடைந்திருக்கின்றார்கள் என்ற செய்தியையும் சொல்லியாகவேண்டும். அவர்களின் அரசியல் பின்னணி அறிந்திராத ஒருசில யாழ் இளம் ஊடகவியலாளர்களும் இவர்களால் உள்வாங்கப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு உருவாக்கப்பட்ட பேரவையானது அரசியல் சிவில் சமூகத்தை பெருமளவாக கொண்டுள்ளபோதும் குறித்த மூன்று கட்சிகளை சேர்ந்தவர்களை உள்வாங்கிய இவர்கள் மேலும் பலரை முன்னரே கலந்துரையாடி மாகாண சபையிலிருந்து தேசியத்தின்பால் குரல்கொடுக்கும் பலரையும் உள்வாங்கியிருக்கலாம் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

அடுத்து பலப்படுத்த சிந்தித்த பலருள் தாயக,புலம்பெயர் அமைப்பு பிரதிநிதிகள் பலர் அடங்குகின்றார்கள் அவர்களை இந்த பேரவை ஏற்பாட்டாளர்கள் முழுமையாக கலந்துரையாடவில்லை என்றும் இவர்கள் திறந்த வெளியில் இந்த கலந்துரையாடல்கள் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தால் பேரவையும் இன்னும் பல தரப்பு ஆர்வலர்களையும் உள்வாங்கியிருக்கலாம் என்பதே உண்மை.

தொடரும்.....

குறிப்பு-நாளைய தொடரில் இந்தபேரவையின் தோற்றத்தின் தேவை தொடர்பிலும் தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால செயற்பாட்டிலிருந்து கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை பற்றியும் இன்றுவரை ஆதாரங்களுடன் நோக்குவோம்.