இவ்வாரம் முக்கிய பிரமுகர்கள் கைதாவர்
கடந்த ஆட்சியின் முக்கிய பிரமுகர்கள் தொடர்பான விசாரணைகள் சட்டபூர்வமாக முடிவடைந்துள்ள நிலையில் இவ்வாரம் பல பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் என சர்வதேச வர்த்தக மற்றும் முதலீடுகள் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
அத்துடன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியைப் போன்று "லஞ்சம்" பெற்றுக் கொண்டு வெளிநாடுகளுடன் எமது அரசு உடன்படிக்கைகளை செய்து கொள்ளவில்லை என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகை யில்,
இந்தியாவுடனான தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் தொடர்பான (எட்கா) உடன்படிக்கை தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் எமது நாட்டின் கல்வியாளர்கள், தொழில்சார் நிபுணர்கள், சிவில் அமைப்புக்கள் உட்பட பல தரப்புக்களினது ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு வ௫கின்றன.
இலங்கைக்கு பொருளாதார நன்மைகளை பெற்றுக் கொள்ளும் விதத்திலேயே இந்தியாவுடனான (இட்கா) உடன்படிக்கை கைச்சாத்திடப்படும். இந்த உடன்படிக்கையானது இலங்கையில் வெ ளிநாட்டு முதலீடுகளுக்கான ஒரு நுழைவாயிலாகவே அமையும். அதைவிடுத்து எமது நாட்டின் மனித வளத்துக்கோ அல்லது தொழிற்துறை வளத்துக்கோ பாதிப்பு ஏற்படும் விதத்தில் எதுவும் அமையாது.
இது தனிப்பட்ட ரீதியான அல்லது அரசியல் ரீதியான உடன்படிக்கையல்ல. நாட்டின் ஏற்றுமதியை அதிகரித்து தேசிய உற்பத்தியை ஊக்குவித்து, பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்புவது குறித்தும் அரசின் 10 இலட்சம் தொழில் வழங்கும் திட்டத்தை நடைமுறை சாத்தியமாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தியே இவ்வாறான திட்டஙகளை முன்னெடுக்கின்றோம். இந்தியாவுடன் மட்டுமல்ல பல நாடுகளுடனும் வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொள்ளவுள்ளோம்.
பிரமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம அகியோர் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டே செயற்படுகின்றனர். குறுகிய அரசியல் நோக்கங்கள் கிடையாது. உலக மயமாக்கல் பொருளாதார யுகத்தில் எம்மால் தனித்து இயங்க முடியாது. கடந்த கால ஆட்சியாளர்கள் இலங்கையை உலகிலிருந்து தனிமைப்படுத்தியிருந்தனர்.
எனவே தான் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இலங்கையின் ஏற்றுமதி 34 வீதம் குறைவடைந்தது. வெ ளிநாடுகளில் அதிக வட்டிக்கு கடன்களை வாங்கி நாட்டை கடனுக்குள் தள்ளிவிட்டனர். இந்த சுமைகள் அனைத்தும் மக்கள் மீது சுமத்தப்பட்டன.
அது மட்டுமல்லாது வெ ளிநாடுகளுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்படும் போதும், வெ ளிநாடுகள் இங்கு முதலீடுகளை மேற்கொள்ள முயற்சித்தபோதும் அவர்களிடம் இலஞ்சம் கோரப்பட்டது. இன்றைய நல்லாட்சியில் இலஞ்சம், ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை. நாட்டினதும், மக்களினதும் நன்மை கருதியே அனைத்து உடன்படிக்கைகளும் ஏற்படுத்திக் கொள்ளப்படுகின்றன. நாங்கள் இலஞ்சம் பெறவில்லை.
இந்தியாவுடனான (இட்கா) உடன்படிக்கை இலங்கைக்கு சாதகமானதாகவே ஏற்படுத்தப்படும். இன்று அரசியல் இலாபம் தேடும் மஹிந்தவும், அவரது கூட்டாளிகளும் இவ் உடன்படிக்கை தொடர்பான பொய்யான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர். இதற்கு மக்கள் ஏமாற மாட்டார்கள்.
நிதிக் குற்றம் தொடர்பான விசேட பிரிவு (எப்.சி. ஐ.டி) கடந்த ஆட்சியில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட பலரது விசாரணைகளை சட்டரீதியாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. எனவே இவ்வாரத்தில் பல பிரமுகர்கள் கைது செய்யப்படலாம் என்றார்.








