Breaking News

மஹிந்தவின் பாதுகாவலர் காணியில் அதிரடி சோதனை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாவலராக கடமையாற்றிய மேஜர் நெவில் வண்ணியாரச்சியின் மனைவிக்கு சொந்தமானது எனக் கூறப்படும் காணியில் பாதுகாப்பு தரப்பினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியினுள் செல்வதற்கு யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. பணம், நகை மற்றும் ஆயுதங்கள் போன்றவை அங்கு காணப்படுகின்றதா என ஆராயவே குறித்த அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் மேற்கொண்டதாக கூறப்படும் மோசடிகளை ஆராயுமாறு, கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டியவினால் FCID இனர் மற்றும் CID இனருக்கு அண்மையில் உத்தரவிடப்பட்டிருந்தது.

மேஜர் நெவில், பிரிகேடியர் தமித ரணசிங்க, கெப்டன் விமலசேன ஆகியோரின் வங்கிக் கணக்குகளின் விபரங்களை அறிய நீதிமன்றம் வழங்கிய அனுமதியை அடுத்து, இரகசிய பொலிஸாரினால் அவர்கள் மூவரினதும் 32 வங்கிக் கணக்குகள் மற்றும் 47 நிதி நிறுவனங்களில் காணப்பட்ட வைப்புகள் தொடர்பில் விபரம் சேகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய நெவில் வன்னியாரச்சி, அரசாங்கத்திற்கு சொந்தமான வெறும் காணிகள் மற்றும் வீடுகள் போன்றவற்றை தனது பெயருக்கு மாற்றியுள்ளதாக பொலிஸ் நிதி மோசடிப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

மேலும் ‘மகநெகும’ திட்டத்திற்கு சொந்தமான டிப்பர் வாகனங்கள் சிலவற்றை, அவர் தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், எரிபொருள் நிரப்பும் நிலையம் மற்றும் 5 ட்ரக்டர்கள், 2 லொறிகள், 7 பஸ்கள் என்பன அவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.