Breaking News

ஆறாவது நாளாகவும் தொடரும் அரசியல் கைதிகளின் போராட்டம்

கொழும்பு புதிய மெகசின் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் இரண்டு கைதிகளும், கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் 14 கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நான்கு கைதிகள் சுகவீனமுற்ற நிலையில் சிறைச்சாலைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தங்கள் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு கோரி அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு விபரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கைதிகளின் விடயம் குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான துஷார உபுல்தெனிய குறிப்பிட்டார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்திற்கு பல தரப்பினரால் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றபோதும், குற்றச்சாட்டுக்கள் இன்றி எவரும் தடுத்துவைக்கப்பட்டிருக்கவில்லை என்றும் தமிழ் அரசியல் கைதிகள் என எவரும் இல்லையென்றும் அரசாங்கத் தரப்பால் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

கடந்த வருட இறுதியிலும் தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு உரிய தீர்வைப் பெற்றுத்தருவதாக அரசாங்கம் குறிப்பிட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

எனினும், தொடர்ந்த வழக்கு விசாரணைகளின் போது சிலருக்கு புனர்வாழ்வளிப்பதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் பரிந்துரை செய்தது. புனர்வாழ்வுக்கு செல்வதை மறுக்கும் கைதிகள், தாம் இத்தனை காலமும் சிறையில் வாடியதை தண்டனை காலமாக கருதி, நிபந்தனையின்றி பொது மன்னிப்பளித்து விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.