வாக்கெடுப்புக்கு முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்ற பந்தி நீக்கப்பட்டுள்ளது - சுரேஸ்
அரசியல் அமைப்பு மாற்றம் வாக்கெடுப்புக்கு போகும் முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்று குறிப்பிடப்பட்ட பந்தி எல்லாம் நீக்கப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் பேரவையின் வவுனியா மாவட்ட அறிமுக நிகழ்வும் தமிழ் மக்களுக்கான தீhவு திட்ட யோசனைக்கான மக்கள் கருத்தறியும் நிகழ்விலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், தமிழீழம் இல்லாத நிலையில் தமிழ் மக்களுடைய கோரிக்கை என்ன என்பதை தெளிவாக முழுமையாக முன்வைக்காத ஒரு சூழல் இருந்து கொண்டு வந்தது. அரசாங்கம் ஒரு அரசியல் சாசன சபையை உருவாக்க சிந்தித்தது.
அதன் காரணமாக அந்த சபைக்கு தமிழ் மக்களின் தேவைகள் என்ன என்று கூற வேண்டிய தேவை இருந்தது. அதனால் தான் நாம் தமிழ் மக்கள் பேரவை மூலம் ஒரு நிபுணர் குழுவை நியமித்து இந்த தீர்வு திட்ட வரைவை தயாரிக்கவேண்டி ஏற்பட்டது.
அதன்படி தமிழ் மக்கள் பேரைவையின் தீர்வுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். இதில் மக்கள் கருத்துக்களைப் பெற்று அதனை அரசாங்கத்திற்கும், சர்வதேசத்திற்கும் வழங்கவுள்ளோம். இந்த தீர்வுத் திட்டத்தை சரி என்று ஏற்றால் எதிர்க்கட்சி தலைவர் சம்மந்தன் இணைந்து இதனை இன்னும் வலுப்படுத்தி அரசாங்கத்திடம் முன்வைக்க முடியும். இதில் பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு வேண்டாம். இதில் தமிழ் மக்களின் பிரச்சனை. மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் எதற்காக உங்களை தெரிவு செய்தார்கள் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசியல் சாசன சபை ஒன்று உருவாக்கப்படுமாக இருந்தால் அதில் உள்ள 225 பேரில் 16 பேர் மாத்திரமே தமிழ் தேசியக் கூட்டமைப்பை சார்ந்தவர்கள். இதனால் இந்த சிறுபான்மையினர் கூறுவது எடுபடுமா என்று ஒரு கேள்வி இருக்கிறது. ஏனென்றால் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திகட்சி போன்ற எல்லோரும் வடக்கு, கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களையும் எதிர்பார்கள் என்பதில் ஐயமில்லை.
அரசியல் சாசன சபையை நிறுவுவது தொடர்பாக போன மாதம் இரண்டு நாட்கள், இந்த மாதம் இரண்டு நாட்கள் விவாதங்கள் நடந்தும் இன்னும் வாக்கெடுப்புக்கு செல்லவில்லை. அடுத்த மாதம் தான் வாக்கெடுப்புக்கு போகும் என்று கூறப்படுகிறது. வாக்கெடுப்புக்கு போகும் முன்னரே தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்று குறிப்பிடப்பட்ட பந்தி எல்லாம் நீக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.