Breaking News

யாழில் இரண்டாம்கட்ட விசாரணைகளை ஆரம்பித்தது பரணகம ஆணைக்குழு

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று சனிக்கிழமை மீண்டும் யாழ்ப்பாணத்தில் விசாரணை அமர்வுகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் பரணகம ஆணைக்குழு 2ஆம் கட்ட விசாரணை அமர்வுகளை நடத்தியிருந்த நிலையில் சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு அமர்வுகள் நடத்தப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் நடத்தப்படாத பிரதேச செயலக பிரிவுகளுக்கான விசாரணை அமர்வுகள் இன்றிலிருந்து எதிர்வரும் மாதம் முதலாம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் கோப்பாய், பருத்தித்துறை, கரவெட்டி ஆகிய பிரதேச செயலகங்களுக்காக கோப்பாய் பிரதேச செயலகத்திலும் நாளை ஞாயிற்றுக்கிழமை வேலணை, ஊர்காவற்றுறை காரைநகர், நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலகங்களுக்காக வேலணை பிரதேச செயலகத்திலும் நாளை மறுதினம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மருதங்கேணி, சாவகச்சேரி பிரதேச செயலகங்களுக்காக சாவகச்சேரி பிரதேச செயலகத்திலும் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இம்முறை இடம்பெறவுள்ள அமர்வுகளில் மொத்தமாக 772 பேர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதுடன் இந்த அமர்வுகள் குறித்த தினங்களில் காலை 8.30 தொடக்கம் மாலை 5.30வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.