Breaking News

இன்று யாழ். செல்கிறார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

நான்கு நாள் பயணமாக நேற்று இலங்கை வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், இன்று யாழ்ப்பாணம் சென்று நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார்.

நேற்றுக்காலை கொழும்பு வந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், நேற்று மதியம் இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.அதையடுத்து, கொழும்பிலுள்ள ஐ.நா பணியகத்தில், ஐ.நா அதிகாரிகளை அவர் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

இலங்கைக்கான ஐ.நாவின் பதில் நிரந்தரப் பிரதிநிதி மற்றும், இலங்கையில் பணியாற்றும் ஐ.நா அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.இதன் போது, ஐ.நா அமைப்புகளின் செயற்பாடுகள், மற்றும் நிலைமைகள் தொடர்பாக அவர் கேட்டறிந்தார்.அதேவேளை, நேற்று கொழும்பில் உள்ள ஐ.நா பணியகத்தின் முன்பாக, ஹுசேனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விமல் வீரவன்ச தலைமையில், தேசிய சுதந்திர முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனால் ஐ.நா பணியகத்தின் முன்பாக பெருமளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.இதனிடையே, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் இன்று யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

அங்கு, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இலங்கை அரசாங்க அதிகாரிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள்,பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு, நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவும் ஏற்பாடு செய்துள்ளனர்.