எட்டு மணிநேரம் நின்றநிலையில் வாக்குமூலமளித்த கோத்தா
ரக்னா லங்கா, எவன்கார்ட் ஆயுத களஞ்சிய நிறுவன ஊழல் குற்றச்சாட்டில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் எட்டு தடவைகள் இடம்பெற்ற தொடர்ச்சியான விசாரணையின் பின்னர் முதல் தடவையாக முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ நேற்று வெள்ளிக்கிழமை வாக்கு மூலமளித்தார். இதன்போது, விசாரணை அதிகாரிகளின் முன்னிலையில் கோத்தபாய ராஜபக்ஷ எட்டு மணிநேரம் நின்றுகொண்டு சாட்சியமளித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின்கீழ் செயற்பட்ட ரக்னா லங்கா, எவன்கார்ட் ஆயுத களஞ்சியம் மற்றும் அதில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் தொடர்ச்சியாக எட்டு தடவைகள் விசாரணை நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்றும் பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கட்டடித் தொகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும் நேற்று முதல் தடவையாக கோத்தாபய ராஜபக்ஷவிடம் ரக்னா லங்கா ஆயுத நிறுவனம் தொடர்பிலும் எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் குறித்தும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறப்பட்டது. நேற்று காலை 10 மணியளவில் ஆணைக்குழுவில் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தபோதிலும் சுமார் எட்டு மணிநேரம் இந்த வாக்குமூலம் வழங்கல் நீடித்திருந்தது. இதன்போது எட்டு மணித்தியாலயமும் நின்ற நிலையிலேயே வாக்குமூலமளித்ததாக அவர் கூறியிருந்தார்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறுகையில்,
தொடர்ச்சியாக எம்மீது அர்த்தமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது ஆட்சியில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வந்த ரக்னா லங்கா ஆயுத நிறுவனத்தின் செயற்பாடுகள் மற்றும் ஆயுத பரிமாற்றம் மேற்கொண்ட எவன்கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி என்மீது தொடர்ச்சியாக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இன்று என்னிடம் வாக்குமூலம் பெறவேண்டும் என வரவழைத்து எட்டு மணிநேரம் வாக்குமூலம் பெற்றனர். நின்றுகொண்டே மிகநீண்ட நேரம் வாக்குமூலம் வழங்கினேன். பின்னர் வாக்குமூலம் பதிவுசெய்ய நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி ஒருவர் எனக்கு ஆசனம் ஒன்றை பெற்றுக்கொடுத்தார்.
எவ்வாறு இருப்பினும் என்னால் முடிந்த வரையில் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி நல்லாட்சி அரசாங்கத்தின் வேலையை இலகுபடுத்தி கொடுத்துள்ளேன். ஏனைய காரியங்களை அரசாங்கம் மேற்கொள்ளும். எம்மை பழிவாங்கவும் எமது பயணத்தையும் மக்கள் எம்மீது வைத்துள்ள ஆதரவையும் முற்றாக அழித்து எம்மை முழுமையாக ஓரங்கட்டும் வகையில் அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது என அவர் குறிப்பிட்டார்.








