இலங்கையின் நிலைமைகள் – இந்திய ஜனாதிபதி மகிழ்ச்சி
இலங்கையின் தற்போதைய நிலைமைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சந்தித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பின் போது இருநாடுகளினதும் பொருளாதார நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தப் பிராந்தியத்தில் இலங்கை பலமுள்ள ஒரு நாடாக மாறுவதற்கு, இந்தியாவின் உதவிகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்வதற்குத் தயாராக இருப்பதாகவும் இந்தியக் குடியரசுத் தலைவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் ஒன்றினது வெற்றி மற்ற நாட்டுக்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் விரைவில் இலங்கைக்கான பயணத்தை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்குச் சென்றிருந்த போதே, இலங்கை நிதியமைச்சர், இந்தியக் குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.








