Breaking News

என்னதான் கத்தினாலும் ஆட்சியை கவிழ்க்க முடியாது!

என்னதான் கத்தி எப்படி கூச்சலிட்டாலும் இந்த அரசாங்கத்தையோ, ஆட்சியையோ கவிழ்க்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) காலை அம்பாறை, பாலமுனை பொது விளையாட்டரங்கில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார். குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

”இலங்கையில் ஜனநாயகம் மற்றும் கருத்துச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒரு பின்னணியில், கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்துவதற்கான சுதந்திரம் அனைவருக்கும் இருக்கின்றது.

அவ்வாறு கூட்டங்களையும் பேரணிகளையும் நடத்தும் தலைவர்களை காணாமல் போக செய்வது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை அல்ல.

எவ்வாறான கோஷங்களை எழுப்பினாலும் எதிர்வரும் 05 ஆண்டுகள் வரை அரசாங்கத்தை மாற்றுவதற்கு எவருக்கும் முடியாது. என்ன சதி செய்தாலும், போராட்டங்கைள நடத்தினாலும் அவர்களது கனவு பலிக்காது.

தற்போதுள்ள நிலையில், மின்சார தடை குறித்து பரவலான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர். இந்த மின்தடைக்கும் அரசாங்கம் தான் காரணம் என்று கூக்குரலிடுகின்றனர்.

இயற்கை அனர்த்தங்கள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறும். அதனைத் தடுக்க முடியாது. என்றாலும் மாற்று நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டுள்ளோம்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூக் ஹக்கீம் ஒரு சிறந்த தலைவர். அவர் எதனையும் செய்யக் கூடியவர். எந்த அமைச்சுப் பொறுப்பாகவிருந்தாலும் அதனை அர்ப்பணிப்புடன் செய்பவர்.’ என்றும் கூறினார்.