Breaking News

மகிந்தவைத் தோற்கடித்தது கோத்தாவும் பசிலுமே! - தயான் ஜெயதிலக

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு, பசில் ராஜபக்சவும், கோத்தாபய ராஜபக்சவும், தம்மை முதன்மைப்படுத்தினர். இதற்கான விலையை மகிந்த ராஜபக்ச கொடுக்க வேண்டியேற்பட்டது என்று கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராஜதந்திரியும், மகிந்த ராஜபக்சவின் தற்போதைய ஆலோசகர்களில் ஒருவருமான, தயான் ஜெயதிலக இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,

“போர்க்காலத்தில் மகிந்தவுக்கு பெரும் உதவியாக இருந்த சகோதரர்கள் போருக்குப் பின்னர் பலம் படைத்தவர்களாக மாறினார்கள்.கோத்தாபய ராஜபக்ச திறமையானவர். ஆனால் அவர் தனது வரையறையை மீறி செயற்பட்டார், அதனை மகிந்த கட்டுப்படுத்தவில்லை.

பசில் ராஜபக்ச அரசியல் ரீதியில் அறிவுள்ளவர். பாரிய திட்டங்களை முன்னெடுக்கக் கூடிய திறமையானவர். ஆனால் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ளக அரசியலில் மற்றும் அரச நிர்வாக விடயங்களில் அவரது செயற்பாடுகள் தவறாக இருந்தன.

சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஒதுக்கப்பட்டார்கள். மூத்த உறுப்பினர்கள் மதிக்கப்படவில்லை. பசில், கோத்தா ஆகியோர் தன்னிச்சையாகச் செயற்பட்டனர். இறுதியாக இதற்கான விலையை மகிந்த ராஜபக்ச செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

மைத்திரிபால சிறிசேனவுக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு 2014 ஆம் ஆண்டு நான் மகிந்த ராஜபக்சவிடம் ஆலோசனை வழங்கினேன். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. மைத்திரிக்கு பிரதமர் பதவி வழங்கினால் நிமால் சிறிபால டி சில்வா கோபித்துக் கொள்வார் என மகிந்த தெரிவித்தார். இதிலும் நியாயம் காணப்பட்டது.

போருக்குப் பின்னர் மகிந்தவினால், தனது சகோதரர்களை கட்டுப்படுத்த முடியாமல் போனது. இதன் பிரதிபலனே மைத்திரியின் கிளர்ச்சிக்கு வித்திட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.