Breaking News

வடக்கில் மீட்கப்படும் ஆயுதங்கள் - இராணுவ இருப்பை பலப்படுத்தும் நோக்கமா?

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியருகே பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்தில் ஒருவிதமான பதற்ற சூழ்நிலை காணப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்குச் சொந்தமான காணியின் பின் பகுதியில் பெருந்தொகையான ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக இலுப்பைக்கடவை பொலிஸாரால், மன்னார் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் குறித்த பகுதி நேற்று (புதன்கிழமை) மாலை தோண்டப்பட்டது.

இதன்போது குறித்த குழியிலிருந்து எம்.ஜீ.எல்.40 மில்லி மீற்றர் குண்டுகள் 2, ஆகஸ் கைக்குண்டு 1, ரி.82 தரம் ஒன்று வகை குண்டு 2, ரி.82 வகை இரண்டு குண்டுகள் 5, ஜே.ஆர்.குண்டுகள் 2, கே.400 தர குண்டுகள் 3, சிங்கப்பூர் குண்டு 1, கிளைமோர் 6, ரங்கன் 99 தர நிலக்கண்ணி வெடிகள் 16 மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பியூஸ்கள் 16, பாகிஸ்தான் நிலக்கண்ணி வெடிகள் 2, அதற்கான பியூஸ் 1, மின்சார பலகை வெடி பொருள் 1, அருள் செல்கள் 3, 6 மில்லி மீற்றர் மோட்டார் செல் 1 என பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அத்தோடு, தோண்டப்பட்ட பாரிய குழியிலிருந்து உக்கிய நிலையில் பெரிய இரும்பு பெட்டகம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட வெடிபொருட்களை பார்வையிட்ட மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, குறித்த வெடிபொருட்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய தரப்பினருக்கு உத்தரவிட்டார். மேலும் குறித்த பிரதேச மக்களுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் குறித்த கமநல சேவைகள் நிலையத்திற்குச் சொந்தமான காணியில் இலுப்பைக்கடவை பொலிஸ் நிலையம் அமைந்திருந்தது. குறித்த பொலிஸ் நிலையம் சற்று தொலைவில் மாற்றப்பட்ட பின்னரே அங்கு கமநல சேவைகள் நிலையம் இயங்கி வந்ததென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, நேற்று யாழ்ப்பாணத்திலும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டதோடு, நேற்று மாலையே மன்னாரிலும் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டமையானது பிரதேச மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கிலிருந்து இராணுவம் அகற்றப்படவேண்டுமென தமிழ் பேசும் மக்களும் தமிழ்த் தலைமைகளும் கோரி வருகின்ற நிலையில், வடக்கின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக சில கடும்போக்கு அமைப்புகள் குரல்கொடுத்து வருகின்றன. இவ்வாறான ஒரு நிலையில் இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளமையானது பிரதேச மக்களிடையே சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது. அத்தோடு, வடக்கில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் கொழும்பு, வெள்ளவத்தை பகுதிக்கு கொண்டுவரப்படுவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் நேற்றைய தினம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது