பெல்ஜியத்தில் ஐ.எஸ் தொடர் குண்டு தாக்குதல்: 35 பேர் பலி(காணொளி)
ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 35 பேர் பலியானார்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
ஐரோப்பாவை உலுக்கிய இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தொடர் குண்டுவெடிப்பால் பிரஸ்ஸெல்ஸ் நகரில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
இதுகுறித்து பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேல் தொலைக்காட்சியில் கூறியதாவது:
பிரஸ்ஸெல்ஸ் நகர விமான நிலையத்திலும், மெட்ரோ ரயில் நிலையத்திலும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் கண்மூடித்தனமானது; கொடூரமானது; கோழைத்தனமானது. இன்றையச் சம்பவம் துக்க
கரமானது மட்டுமல்ல கருப்பு தினமுமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பிரஸ்ஸெல்ஸ் நகரிலேயே பதுங்கியிருக்கலாம் என்று கருதுவதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சர் தீதர் ரெய்ன்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
பாரீஸ் நகர தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டு தேடப்பட்டு வந்த சலா அப்தேசலாம் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பிரஸ்ஸெல்ஸ் நகரில் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருக்கலாம் என கருதப்படுகிறது. கைது செய்யப்பட்ட அப்தேசலாம், விசாரணையின்போது பிரெஸ்ஸல்ஸ் நகரில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறித்து தெரிவித்திருந்ததால் பெல்ஜியத்தில் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த தாக்குதலில் 35 பேர் பலியாகியுள்ளனர்.
ஸாவன்டம் விமான நிலையத்தில் காலை 8 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. மூன்றாவது குண்டு நகரின் மையப்பகுதியில் உள்ள மால்பீக் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடித்தது. மக்கள் நெரிசல் மிகுந்த ரயில் நிலையத்தில் பயணிகள் வேலைக்குச் செல்வதற்காக ரயிலில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தபோது இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தது.
விமானநிலையத்தில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 14 பேரும், மெட்ரோ ரயில்நிலைய குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 20 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் இரு சம்பவங்களிலும் 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பிரஸ்ஸெல்ஸ் நகர மேயர் யுவன் மேயூர் தெரிவித்தார்.
விமானநிலையத்தில் குண்டுவெடிப்பு நடந்த இடம் ரத்த வெள்ளமாகக் காட்சியளித்ததாகவும் பலர் கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்ததாகவும் சிலர் பீதியில் அங்கும் இங்கும் ஓடியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
பிரஸ்ஸெல்ஸில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், ஒட்டுமொத்த ஐரோப்பா மீதே நிகழ்த்தப்பட்டதாகும்.
ஊடகங்களுக்கு வேண்டுகோள்
பிரஸ்ஸெல்ஸ் குண்டு வெடிப்புத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் இன்னும் சுதந்திரமாக உலவுவதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையில், அந்தத் தாக்குதல் குறித்த போலீஸாரின் விசாரணை குறித்த தகவல்களை ஊடகங்கள் வெளியிடுவது பயங்கரவாதிகள் தப்ப வழியளிக்கும் என பெல்ஜியம் அரசு தலைமை வழக்குரைஞர் ஃபிரெடெரிக் வேன் லீயு கூறினார்.
எனவே, அந்த விசாரணை தொடர்பான விவரங்களை வெளியிட வேண்டாம் என ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டார்.
ஐரோப்பா முழுவதும் உஷார் நிலை
இந்தத் தொடர் குண்டு வெடிப்புத் தாக்குதலைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலுள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. லண்டன், பராகுவே, ஆம்ஸ்டர்டாம், வியன்னா உள்ளிட்ட முக்கிய நகரங்களின் விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ரஷியாவும் தனது விமான நிலையப் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தது.
இந்தியர்கள் உயிரிழப்பு இல்லை
பிரஸ்ஸெல்ஸ் தாக்குதலில் இந்தியர்கள் எவரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை என பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், இந்தியாவைச் சேர்ந்த ஜெட் ஏர்வேஸ் விமானப் போக்குவரத்து நிறுவனப் பணியாளர்கள் இருவர் பிரஸ்ஸெல்ஸ் விமான நிலைய குண்டு வெடிப்பில் காயமடைந்ததாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.
பிரஸ்ஸெல்ஸில் குண்டு வெடிப்புகள் குறித்த தகவல்கள் வேதனையளிப்பதாக உள்ளன. அந்தத் தாக்குதல்கள் கடும் கண்டனத்துக்குரியவை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- பிரதமர் நரேந்திர மோடி
பிரதமரின் பெல்ஜியம் பயணம் ரத்து இல்லை
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸெல்ஸில் குண்டு
வெடிப்புச் சம்பவம் நடந்துள்ள சூழ்நிலையில் வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி அங்கு செல்லும் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தேடப்படும் மர்ம நபர்
விமான நிலையத்தில் டிராலியில் பெட்டியை வைத்து தள்ளிக் கொண்டு செல்பவர்தான் பெல்ஜியம் போலீஸாரால் தேடப்பட்டு வரும் மர்ம நபர். (சிசிடிவியில் பதிவான படம்)

















