Breaking News

கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பொறுப்பை ஏற்கத் தயார் - சுவாமிநாதன்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தான் ஏற்பதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும் கைதிகளை விடுவிப்பதா இல்லையா என்பது குறித்து தன்னால் தீர்மானிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் பங்கேற்று உரையாற்றியபோது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ள அதேவேளை, ஐவர் தொடர்பில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஏனைய ஐந்து பேர் தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இவர்கள் தொடர்பில் எதிர்வரும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் மேற்கொள்ளப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 11 பேர் அல்ல 14 பேர் என சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் என மற்றுமொரு கேள்வியை எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கைதிகளுக்கு ஒருவேளை உயிராபத்து ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை தான் ஏற்பதாகவும் உறுதியளித்தார்.