Breaking News

இந்தியாவுடன் எட்கா உடன்பாடு – அரசை எச்சரிக்கிறார் மகிந்த

இந்தியாவுடன் எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாட்டைச் செய்து கொள்ளும் விடயத்தில் எச்சரிக்கை அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“இந்த உடன்பாட்டு வரைவின் உள்ளடக்கம் தொடர்பாக நாடாளுமன்றத்துக்கோ அல்லது பொதுமக்களுக்கோ அதிகாரபூர்வமாக தெரியப்படுத்தப்பட வேண்டும்.இந்தியாவுடன் எட்கா உடன்பாட்டுக்குள் நுழையும் போது படிப்படியான அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

முதற்கட்டமாக, இந்தியாவுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுதந்திர வர்த்தக உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகளை இந்தியா நீக்க வேண்டும்.இந்தக் கட்டத்தில் இந்திய மீனவர்களின் ஊடுருவல் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இதன் மூலம் இருநாட்டு மக்களிடையேயும் நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர், சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் நடைமுறைப்படுத்தல், இலங்கை பங்காளர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தினால், அடுத்த கட்டத்துக்குள் நுழையலாம்.

தற்போது, ஆண்டுதோறும் 4000 மில்லியன் டொலருக்கு இந்தியப் பொருட்களைச் சந்தைப்படுத்த இலங்கை வாய்ப்பை அளித்துள்ளது. ஆனால் சுதந்திர வர்த்தக உடன்பாட்டுக்கு அமைய இருதரப்பு வர்த்தகத்தில் சமநிலை பேணப்படவில்லை.

இந்தியாவுக்கு எமது ஏற்றுமதிகளை செய்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை என்று இலங்கையர்கள் உணர்கின்றனர்.

ஆடை, தேயிலை போன்ற இலங்கையின் முக்கிய உற்பத்திகளை கட்டுப்பாடுகளின்றி இந்தியா திறந்து விட வேண்டும்.

தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்காமல், இந்தியாவுடன் பரந்தளவிலான வர்த்தக உடன்பாடுகளை செய்து கொள்ள முயன்றால், பொதுமக்களின் எதிர்ப்பு இயல்பாகவே அதிகரிக்கும்” என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.