கடும் எதிர்பிற்கு மத்தியிலும் யாழில் நாளை காணி சுவீகரிப்பிற்கான நில அளவை
மக்களின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியிலும் நல்லாட்சி அரசாங்கத்தினால் யாழ் மாவட்டத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பாதுகாப்பு தேவைகளுக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான நில அளவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களின் போது, காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தும் காணி அளவிடும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளமை கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
கடந்த ஆட்சியில் யாழ் மாவட்டத்தில் மாத்திரமல்லாமல் வடக்கு மாகாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தின் தேவைக்காக காணி சுவீகரிப்பு இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வலி.வடக்கு சேந்தான்குளம் பகுதியில் தேவாலயத்திற்கு சொந்தமான 4 ஏக்கர் காணியை கடற்படையின் தேவைகளுக்காக சுவீகரிக்கும் வகையில் நாளை நில அளவை திணைக்களத்தினால் நிலஅளவை செய்யப்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வலி.தெற்கு திருவடிநிலைப் பகுதியிலும் எதிர்வரும் 10 ஆம் திகதி 11 ஏக்கர் நிலப்பரப்பை சவீகரிக்கும் வகையில் நில அளவை திணைக்களத்தினரால் காணிகள் அளவீடு செய்யப்படவுள்ளதாகவும் கூறிப்பிடப்படுகின்றது.








