Breaking News

அரசியலமைப்பு குறித்த மக்கள் கருத்தறியும் குழு சம்பந்தனைச் சந்திக்கிறது

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தறிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட குழு, நாளை மறுநாள் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் சிறப்பு சந்திப்பொன்றை நடத்தவுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்களின் கருத்தறிய உருவாக்கப்பட்ட குழுவின் தலைவரும் சட்டதரணியுமான லால் விஜயநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“புதிய அரசியலமைப்பு தொடர்பாக மக்கள் கருத்தறியும் குழுவின் ஆயுள்காலம், இந்தமாதம் 31 ஆம் நாளுடன் முடிவடையவுள்ளது.இதுவரை 3000 இற்கும் மேற்பட்ட கருத்துக்கள் மற்றும் யோசனைகள் பெறப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு தொடர்பாக, சிறப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனை எமது குழு நாளை மறுநாள் நாடாளுமன்றத்தில் சந்திக்கவுள்ளது.

இந்த சந்திப்பின் போது எமது குழுவுக்கு தற்போது வரை கிடைத்துள்ள யோசனைகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பிலும் பேசப்படும்.வரும் வாரங்களில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோருடனும் இது தொடர்பாக சிறப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளோம்.

எமது குழுவினர் 25 மாவட்டங்களில் உள்ள மக்களிடமிருந்தும் புதிய அரசியலமைப்பு தொடர்பான கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.ஏப்ரல் மாதமளவில் இது தொடர்பிலான அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.