Breaking News

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக மகிந்த அமரவீர தெரிவு

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் புதிய பொதுச்செயலராக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவு செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நேற்று முன்னிரவு நடந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்திலேயே இந்த தெரிவு இடம்பெற்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், இலங்கை மன்றக் கல்லூரியில் இந்தக் கூட்டம் இடம்பெற்றிருந்தது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாக இருந்த, பேராசிரியர் விஸ்வ வர்ணபால அண்மையில் காலமானதையடுத்தே, மகிந்த அமரவீர இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மகிந்த அமரவீர, மைத்திரிபால சிறி்சேன அரசாங்கத்தில் கடற்றொழில் அமைச்சராகப் பதவி வகித்து வருகிறார்.

முன்னர் மகிந்த ராஜபக்சவின் தீவிர ஆதரவாளராக இருந்த இவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த குடும்பத்தின் எதிர்ப்புக்கும் மத்தியில் போட்டியிட்டு, நாமல் ராஜபக்சவுக்கு அடுத்ததாக 84,516 விருப்பு வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டவர் என்பதும் சமல் ராஜபக்சவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.