ஜெனீவா அழுத்தங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன ; மஹிந்த கூறுகிறார்
ஸ்ரீலங்கா மீது ஜெனீவாவிலிருந்து தொடரப்படும் அழுத்தங்கள் இன்னும் முடிவிற்கு வரவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை கால்டன் இல்லத்தில் மேல்மாகாண சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
ஜெனீவாவிலிருந்து வரும் அழுத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக புதிய அரசாங்கம் தெரிவித்து வருகின்றது.
எனினும் அந்த அழுத்தங்கள் இன்னும் குறையவில்லை என்றும் அது எதிர்காலத்திலும் தொடர்ந்துகொண்டே இருக்கும் எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டார்.
தனது ஆட்சியின்போது ஸ்ரீலங்காவில் பாரிய அபிவிருத்திகளும், பொருளாதார வளர்ச்சியும் காணப்பட்டதாக தெரிவித்த அவர், புதிய ஆட்சியாளர்கள் அதனை ஏற்றுக்கொண்டிருப்பதாகவும், ஆனால் தற்போது பொருளாதாரம் மந்த கதியிலேயே உள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.