Breaking News

யாழில் பொருத்து வீடுகள் கட்டப்படுவதற்கான காரணம் என்ன?



சாதாரண வீடுகள் கட்டப்படுவதற்கு செலவாகும் தொகையை விட அதிக தொகையை செலவழித்து, வடக்கு மக்களின் வாழ்வியலுக்கு பொருத்தமற்ற பொருத்து வீடுகளை அமைப்பதற்கான காரணம் என்னவென, எதிர்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார்.

மூன்றுநாள் விஜயமாக வடக்கு சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தை தெரிவித்தார்.

குறித்த வீட்டுத்திட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு தாம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்த சம்பந்தன், மக்களின் கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்த பரம்பரையான நடவடிக்கைகளில் மாற்றத்தினைக் கொண்டு வருவதை விரும்பவில்லை என்றார்.

மேலும், தமிழ் மக்களது கலாசாரம், வாழ்வியலுக்கு பொருத்து வீடுகள் பொருத்தமாக இருக்காதென்றும், பாரம்பரிய கொங்கிறீட் வீடுகளையே எதிர்பார்ப்பதாகவும், விரைவில் இதற்கு சிறந்த தீர்வொன்று எட்டப்படுமென்றும் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டார்.