Breaking News

தேர்தல் பிரசாரத்தின் போது சம்பந்தர் கூறாதது ஏன்?

ஒருவருக்கு கடுமையான மறதி நோய். மறதி நோய்க்காக அவர் டாக்டரைச் சந்தித்தார். டாக்டர் எனக்கு கடுமையான மறதி என்றார் அந்த நபர்.  அதற்கு டாக்டர் எவ்வளவு காலமாக இருக்கிறது என்று கேட்டார். நோயாளியோ எதை டாக்டர் கேட்கிறீர்கள் என்றார். 

மறதி என்று சொன்னதையே அந்தாள் மறந்து போனார். இதுதான் உண்மையான மறதி என்பதை அந்த டாக்டர் புரிந்து கொண்டார். இப்படியான மறதி எங்கள் அரசியல் தலைவர்களுக்கு வந்து விட்டால், என்ன கதி என்று நினைத்த போது தலை சுற்றியது.

சரி, முதுமைப் பருவத்தில் மறதி என்ற நோய் தாக்குவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அத்த கையதொரு மறதிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தர் ஆளாகி விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
இதை நாம் கூறும் போது ஐயா! மறதிக்கும் அறளைக்கும் என்ன வித்தியாசம் என்று நீங்கள் கேட்பதும் புரிகிறது.

அறளை என்பதும் முதுமையில் ஏற்படுகின்ற ஒரு வியாதிதான். அதற்காக எல்லா முதியவர்களுக்கும் அறளை ஏற்பட்டு விடுவதில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.எதுவாயினும் மறதியும் அறளையும் வேறுபட்ட நோய்கள் என்பது மட்டும் இப்போதைக்குத் தெரிந் திருந்தால் பின்னர் இரண்டுக்குமான வித்தியாசத்தைக் கண்டு கொள்ள முடியும்.

இது ஒருபுறம் இருக்க 2016ஆம் ஆண்டில் தீர்வு எட்டப்படும் என்பது தனது சொந்தக் கருத்து என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பதானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பொதுத் தேர்தலின் போது 2016ஆம் ஆண்டில் இனப்பிரச்சினைக்கு இறுதித் தீர்வு அடை யப்படும். இது நிச்சயம். இதை நம்புங்கள் என்று உறுதிபடக் கூறிய இரா.சம்பந்தன், இப்போது அது சொந்தக் கருத்து எனக் கூறுவதானது எவ்வளவு ஏமாற்றத்தனம் என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது. 

2016ஆம் ஆண்டுக்குள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும் என்று நம்புகிறேன். இது தனது தனிப்பட்ட கருத்து என தேர்தல் பிரசாரத்தின் போது இரா.சம்பந்தன் கூறியிருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும்.இதைவிடுத்து ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து அவரின் வெற்றிக்குப் பின்னர் நடந்த பொதுத்தேர்தல் பிரசாரத்தின் போது, 

2016க்குள் தீர்வு என்று கூறினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தருக்கு உத்தரவாதம் அளித்துள்ளார். அதனையே சம்பந்தர் ஐயா கூறுகின்றார் என்றே மக்கள் நினைப்பர்.இவ்வாறாக மக்களை நம்பவைத்து வாக்குப்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் இப்போது, 

2016இல் தீர்வு காணப்படும் என்று கூறியது தனது சொந்தக் கருத்து எனத் தெரிவிப்பது எந்த வகையிலும் நியாயமற்றது. இத்தகைய பிறழ்வுகள் நொந்து போன தமிழ் மக்களை திட்டமிட்டு ஏமாற்றுவதாகவே அமையும். 

-வலம்புரி