பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து ஐ.நா பிரதிநிதிகளுடன் இலங்கை பேச்சு
பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்குப் பதிலான புதிய சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா பிரதிநிதிகளுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது.
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க நியூயோர்க்கிலுள்ள பயங்கரவாத தடுப்பு தொடர்பான ஐ.நாவின் நிறைவேற்று அதிகாரி ஜோன் போல் லேபர்ட்டை (Jean-Paul Laborde) நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பயங்கரவாத தடுப்பு தொடர்பான ஐ.நாவின் பிரதிநிதிகள் அண்மையில் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் தற்போது ஸ்ரீலங்காவில் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்கி அதற்குப் பதிலாக சர்வதேச தரப்பிலான புதிய சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் பயங்கரவாத தடுப்பு தொடர்பான ஐ.நாவின் தொழில்நுட்ப உதவிகளைப் பெறுவதற்கு ஸ்ரீலங்கா சார்பில் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்துள்ள பயங்கரவாத தடுப்பு தொடர்பான ஐ.நாவின் நிறைவேற்று அதிகாரி ஜோன் போல் லேபர்ட், ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவிருப்பதாகக் கூறியுள்ளார்.
அத்துடன் ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் மற்றும் சட்டம், நீதி என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சாகல ரத்நாயக்க, தேசிய, பொது பாதுகாப்புச் சட்டம் மற்றும் சமாதானம் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று வரைபுகளை அரசாங்கம் தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.








