இப்போது எனது மகனை ஏன் கொண்டு சென்றார்கள்? சம்பந்தனிடம் கதறி அழுத தாய்!
நடப்பது நல்லாட்சி என்று சொல்லுகிறார்களே, இந்த நல்லாட்சியில்தான் எனது மகனை வீட்டில் வந்து கைது செய்துகெண்டு போனார்கள் இவ்வாறு கதறி அழுது தெரிவித்தார் முறிகண்டியை சேர்ந்த பத்மநாதன் லலிதாம்பாள். நேற்றைய தினம் கிளிநொச்சிக்கு வருகை தந்த எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் அந்தத் தாயார் இவ்வாறு கதறி அழுது தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முறிகண்டியை சேர்ந்தவர் லலிதாம்பாள். இவரது மகன் பத்மநாதன் ரமேஷ்காந்தன் கடந்த ஒன்பதாம் திகதி சனிக்கிழமை அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இயந்திரத் திருத்தகம் ஒன்றை நடத்தும் ரமேஷ்காந்தன் தனது நிலையத்தில் பணிபுரிந்த முன்னாள் போராளி ஒருவருக்கு லீசிங்கில் மோட்டார் சைக்கிள் ஒன்றை எடுத்துக் கொடுத்துள்ளார்.
குறித்த முன்னாள் போராளிக்கு மோட்டார் சைக்களில் வாங்கிக் கொடுத்தாக தெரிவிக்கப்பட்டு தனது மகன் கைதுசெய்யப்பட்டதாக அவரது தாயார் லலிதாம்பாள் தெரிவித்தார். கைதுசெய்யப்பட்ட தனது மகனை முதலில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்தாகவும் அவர் கைது செய்தமைக்கான ஆதாரங்கள் எதனையும் முதலில் தரவில்லை என்று கூறிய அவர் ஒரு தாளில் சிங்களத்திலும் தமிழிலும் கைதுசெய்ததை உறுதி செய்து எழுதிக் கொடுத்தாகவும் அவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்ட நாளன்று இரவு பதினொரு மணிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவுக்கு உங்கள் மகனை ஒப்படைத்துவிட்டோம் என்று தனக்கு யாழ் பொலிஸார் அறிவித்தாகவும் பின்னர் மறுநாள் பூசாமுகாமுக்கு அனுப்பியதாகவும் அறிவித்துள்ளதாகவும் லலிதாம்பாள் பத்மநாதன் குறிப்பிட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான தன்னுடைய மகன், புனர்வாழ்வு பெற்ற போராளி என்றும் அவர் எந்த தவறும் செய்யவில்லை என்றும் தனக்கு தெரிந்த நபரின் வறுமையைக் கண்டு அவருக்கு அக்கராயனில் இருந்து பால் கொண்டு வந்து கிளிநொச்சியில் விற்பதற்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கிக் கொடுத்தாகவும் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.
எப்பொழுதோ, புதைத்து வைத்த தற்கொலை அங்கிகளை, யாரோ தமது அரசியல் தேவைக்காக காட்ட, அதனை வைத்து அப்பாவியான தனது பிள்ளையை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த லலிதாம்பாள் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும்போது இங்கு ஆட்சி மாறவில்லை என்றும் நடப்பது நல்லாட்சியா என்றும் கேள்வி எழுப்பவே தோன்றுவதாகவும் குறிப்பிட்டார்.
தமது பிள்ளை கைதுசெய்யப்பட்டதால் புதுவருடம் இருண்டுபோன நாளாக மாறியதாக கதறிய அவர், எந்தக் குற்றமும் செய்யாத, யாரோ ஒருவரின் வறுமைக்கு உதவிய தனது பிள்ளையை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இரா.சம்பந்தனிடம் கதறியழுது கேட்டார். இது தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசி அவரை விடுவிக்க நடவடிக்கைகளை எடுப்பதாக இரா. சம்பந்தன் அந்தத் தாயாருக்கு உறுதிமாழி வழங்கினார்.








