Breaking News

பாதாள உலகக் குழுவில் சாள்ஸ் அன்ரனி படையணியின் முன்னாள் போராளி?



கொழும்பில் பாதாள உலகக் குழுவுடன் இணைந்து செயற்பட்ட, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரைக் கைது செய்திருப்பதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சிறப்பு அதிரடிப்படையின் புலனாய்வு அதிகாரிகளால், காலியில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9.மி.மீ கைத்துப்பாக்கி, ஒரு மகசின், 8 ரவைகள், மூன்று கைத்தொலைபேசிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டன.

ஆரம்பக்கட்ட விசாரணைகளில், சந்தேக நபர் கொட்டாஞ்சேனையில் வசித்து வருபவர் என்றும், 29 வயதான ஸ்ரான்லி கென்னடி என்றும் தெரியவந்துள்ளது.

முக்கியமான பாதாள உலகக் குழு உறுப்பினரான இவர், கென்னடி என்று அழைக்கப்பட்டு வருபவர் என்றும், நான்கு கொலைகள் தொடர்பாக தேடப்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.

இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில், இராணுவப் பயிற்சி பெற்று, ஐந்து ஆண்டுகள் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவில் இணைந்திருந்தார். அரசபடைகளிடம் சரணடைந்த பின்னர், இவர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதன்பின்னரே, இவர், கொஸ்கொட சுஜி தலைமையிலான முக்கியமான பாதாள உலகக் குழுவுடன் இணைந்திருப்பதாகவும், கூறப்படுகிறது.

மேலதிக விசாரணைகளுக்காக கென்னடி, தீவிரவாத தடுப்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.