முதல்வர் மீது அவதூறான விமர்சனங்கள் - வட மாகாணசபை கடும் கண்டனம்
அரசியல் தீர்வுத்திட்ட வரைபு தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் மீது அவதூறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமை குறித்து வட மாகாண சபை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது.
வடமாகாண சபையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசியல் தீர்வு திட்டவரைபு தொடர்பான உறுப்பினர்களின் கருத்தறியும் விசேட அமர்விலே அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விமர்சனங்களை தொடர்ந்தும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம், மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு மறுசீரமைப்பில் வடமாகாண தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அரசியல் தீர்வு திட்ட வரை கடந்த மாகாண சபை அமர்வில் முன்வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தென்னிலங்கையில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகள் முதலமைச்சர் மீது, கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள இனவாத அமைப்பான ஹெலஉறுமய போன்ற கட்சிகள் முதலமைச்சரை கைது செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எமது தீர்வு திட்ட வரைபு, வட கிழக்கு மாகாணங்களுக்கான வரைபாக தயாரிக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஸ்ரீலங்காவின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்குள் உள்வாங்கப்படுவதற்காக தயாரிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இதனை முதலமைச்சர் தனியாக தயாரிக்கவில்லை எனவும் 19 பேர் கொண்ட விசேட குழவினால் தயாரிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சர் மீதான விமர்சனங்கள், ஒட்டுமொத்தமாக வட மாகாண சபை மீது முன்வைக்கப்படும் விமர்சனம் என்றும் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் குறிப்பிட்டுள்ளார்.








