தளபதி ராம் பயங்கரவாத தடுப்பு பிரிவில்
கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்த புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் , பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் பொறுப்பிலுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்ற விபரம் தெரியவரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை திருக்கோயில் தம்பிலுவில் பகுதியில் வைத்து நீல நிற ஜீப் வாகனத்தில் வந்த பொலிஸ் சீருடையை ஒத்த சீருடை அணிந்த ஒருவரும் மேலும் இருவரும் கடத்திச் சென்றதாக திருக்கோயில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு குறித்த நபரின் மனைவியால் செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் அம்பாறை மாவட்ட தளபதி ராம் 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, புனர்வாழ்வளிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2013ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து அவர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.