Breaking News

புலிகளால் புதைக்கப்பட்ட தங்கநகைகளை தோண்டும் பணி ஆரம்பம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நீதிமன்றத்தின் அனுமதியுடன் நில அகழ்வு நடவடிக்கையில் நேற்று மாலை 4.00 மணியளவில் இருந்து ஈடுபட்டனர். 

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்தில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகத்தின் தலைமைச் செயலகம், கேப்பாபுலவு வீதி, லூர்த் மாதா சந்தியில் உள்ள இரண்டாம் காணியில் 2009ம் ஆண்டு வரை செயற்பட்டு வந்துள்ளது. குறித்த இடம் இராணுவக் கட்டுப்பட்டிற்குள் வரும் முன், குறித்த செயலகத்திற்கு முன்னே இருந்த தனியார் ஒருவரின் வெறும் காணியில் இருந்த ஆழமான மண் கிணற்றுக்குள் மக்கள் அடைவு வைத்த தங்க நகைகளை போட்டு கிணற்றை தூற்றுள்ளனர். 

இந்நிலையில் தமிழீழ வைப்பகத்துடன் தொடர்புடைய விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தின் ஊடக குறித்த தகவலை வழங்கியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற அனுமதியுடன் குறித்த நில அகழ்வு நடைபெறுவதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக மேலதிகமான தகவல் சரியாக தனக்கு தெரியாது என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

குறித்த நில அகழ்வு நடைபெறும் இடத்தில் மாவட்ட நீதிபதி அவர்கள் சமூகமளித்திருந்தார். இலங்கை மின்சார சபையினர் சிறப்பு மின்னிணைப்பு செய்துள்ளனர். கிணற்றின் அடையாளம் சரியாகத் தெரியாததால் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இரவு நேரமாகையால் அகழ்வு நிறுத்தப்பட்டு 1 ஏக்கர் காணியை சுற்றி பொலிசார் இரவுக் காவலில் ஈடுபட்டுள்ளனர். மீண்டும் அகழ்வு நடவடிக்கை இன்று காலை ஆரம்பமாகும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.