Breaking News

முல்லைத்தீவில் காணி அளவை முயற்சி - மக்கள் எதிர்ப்பு (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு - சுதந்திரபுரம் மற்றும் நாயாறு பகுதிகளில் தந்திரமாக மேற்கொள்ளப்பட்ட காணிகள் அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் பலத்த எதிர்ப்பை அடுத்து தோற்கடிக்கப்பட்டுள்ளது.


பொதுமக்களின் காணிகள் அளவீடு செய்யும் முயற்சிகள் அண்மைக்காலமாக வன்னிமாவட்டத்தில் இடம்பெற்று வரும் நிலையில் இன்று வியாழக்கிழமையும் இதுபோன்ற முயற்சிகள் இடம்பெற்றுள்ளன.

சுதந்திரபுரம் பகுதியிலுள்ள வீதியோர காணியை அளப்பதற்காக நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று காலை விரைந்துள்ளனர்.

இதனைக் கேள்வியுற்ற பிரதேச மக்கள் வீதியில் அவர்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து குறித்த அதிகாரிகள் திரும்பிச்சென்றதாக அங்கிருக்கும் எமது ஐ.பி.சி தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களுடன் இணைந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தியுள்ளனர். இதேவேளை, நாயாறு பகுதியில் நடைபெறவிருந்த காணி சுபீகரிப்பும் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனின் முயற்சியாலும் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் உள்ளிட்டோராலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது 

மக்களது பூர்விக நிலங்களை பறித்தெடுத்து இராணுவத்திங்கு தாரைவாக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிடுமாறும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் இந்த நடவடிக்கையின் போது அங்கு வருகை தந்த ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் கிராமவாசிகள் போன்று, சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் தமது கையடக்கத் தொலைபேசியில் வீடியோ எடுத்துச்சென்றுள்ளனர். 

இவ்வாறான மக்களை அச்சுறுத்தம் செயற்பாடும் நல்லாட்ச்சியிலும் தொடர்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.