Breaking News

புலிகள் பற்றிய மீளெழுச்சிக் கதைகள்: பூனைக்கு விளையாட்டு – எலிக்கு?

புலிகளைப் பற்றிய கதைகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கத்தான் போகிறது. அந்த அளவுக்கு புலிகள் ஓர் உபயோகப் பொருளாக தமிழ், சிங்களப் பரப்பில் உள்ளனர். இதில் கவனத்திற்குரிய விசேசமான ஒரு விசயம் உண்டு. தோற்கடிக்கப்படுவதற்கு முன்னரும் புலிகளின் பெயர் பல தரப்புகளால் பயன்படுத்தப்பட்டது. தோற்கடிக்கப்பட்ட பின்னரும் பல தரப்புகளுடைய நலன்களுக்காகப் இந்தப் பெயர் பயன்படுத்தப்படுகிறது.

தோற்கடிக்கப்படுவதற்கு முந்திய புலிகளைத் தமிழ் நாட்டு அரசியல்வாதிகள், ஊடகங்கள், தென்னிலங்கை, புலம்பெயர்ந்தோர், வர்த்தகர்கள் எனப் பல்வேறு தரப்புகள் பயன்படுத்தின. அவரவர் தமக்கு ஏற்றவாறு எதிர் என்றும் ஆதரவு என்றும் காட்டிக்கொண்டு புலிகளின் பெயரால் நன்மைகளைப் பெற்றனர்.

புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகும் இதே தரப்புகள் அதே வேலையைச் செய்கின்றன. இதில் கூடுதலாக இப்பொழுது தமிழ்த்தரப்பு அரசியலாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.

இப்பொழுது அரசாங்கமும் சிங்களத்தரப்பிலுள்ள சில சக்திகளும் ‘புலிகளின் மீள் எழுச்சி’ பற்றிய புனைகதைகளை உருவாக்குவது, – புலிப்பூச்சாண்டி காட்டுவது சிங்கள மக்களிடத்தில் ஓர் உளவியல் அச்சத்தை உண்டாக்கி வைத்திருப்பதற்காக. அத்துடன் தமிழ்ப் பிரதேசங்களில் படைப்பிரசன்னத்தைத் தொடர்ந்து பேண முற்படுவதற்காகவும். தவிர, புலிகளின் அச்சுறுத்தல் உள்ளதால் அரசாங்கத்தைக் கவனமாக நிர்வகிக்க வேண்டும் என்ற உணர்வைப் பொது வெளியில் உருவாக்கிக் கொள்வதற்காகவும்.

மறுவளத்தில் தமிழ் அரசியற் தரப்புகள் தமது அரசியல் இருப்பை நிலைப்படுத்திக் கொள்வதற்காகவும் மக்களுடைய ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவும் புலிகளின் பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றன. தேர்தற் காலங்களில் இதை மிகத் தெளிவாகப் பார்க்கலாம்.

தமிழ்நாட்டிலுள்ள அரசியற் சக்திகளும் ஊடகங்களும் புலிகளின் பெயருக்குள்ள அபிமானத்தை வைத்துக் கொண்டு தங்களுடைய நலன்களைப் பெருக்கிக்கொள்கின்றன. இதற்காகப் புலிகள் பற்றிய கதைகள் அங்கே வெவ்வேறு விதமாக ஒவ்வொரு தரப்பினாலும் வியாக்கியானப்படுத்தப்படுகின்றன. ‘புலிகள் இன்னும் உள்ளனர். பிரபாகரன் இன்னும் உயிரோடிருக்கிறார்’ என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் இதில் துணிகரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஆகவே, புலிகள் பல தரப்பினருக்கும் மிகப் பயனள்ள உபயோகப் பொருளாகவே இன்னும் உள்ளனர். ஆனால், மெய்யான முறையில் புலிகள் மீள் எழுச்சியடைந்தால் இந்தத் தரப்புகள் அதை விரும்புமா?

நிச்சயமாகப் புலிகளின் மெய்யான மீள் எழுச்சியை பல தரப்பினரும் விரும்பப் போவதில்லை. அப்படி மெய்யாகவே புலிகள் எழுச்சியடைந்தால் அதனால் ஏற்படும் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு இவை தயாரில்லை. அதற்கு இவற்றினால் முடியாது. உண்மையில் அதிலும் பிரபாகரனைப் போன்ற ஒரு தலைமைத்துவப் பண்பைக் கொண்ட புலிகளின் எழுச்சியை இவர்கள் விரும்பவே மாட்டார்கள். பிரபாகரனைப்போல உறுதியும் செயற்பாட்டுத்திறனும் சளையாத வேகமும் யாரையும் பொருட்படுத்தாத ஒரு பண்புடன் புலிகள் மீள எழுச்சியடைந்தால் தமக்கே முதல் உலை வைக்கப்படும் என்று இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.


அத்துடன், புலிகள் மீள எழுச்சியடைந்தால் தமிழ் அரசியல் முற்றிலும் வேறாகி விடும். இலங்கையின் அரசியல் யதார்த்தமே மாறிப்போகும். புலம்பெயர் சூழலிலும்வேறு ஒரு வகையான தன்மையே உண்டாகும். வேண்டுமானால் தமிழ்நாட்டில் இன்னும் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்யும் பொழுதுபோக்குத்தன்மைகள் கூடலாம்.

இன்னொரு பக்கத்தில் புலிகளின் எழுச்சிக் கதைகளை விரும்பும் தமிழ்த்தரப்பிலுள்ள சிலர் அல்லது சில தரப்பினர், தமிழ்மக்களின் இலட்சியத்தை அதாவது, புலிகள் வலியுறுத்திய தமிழீழம், தமிழ்த்தேசியம் என்ற அடையாளங்களைத் தாமே இன்னும் பேணி வருகிறோம். அதற்காகவே தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்காகவே தங்களின் உயிர் மூச்சு இயங்கிக் கொண்டிருக்கிறது என்று காட்ட முற்படும் போக்குமுண்டு.

இதேவேளை இவர்கள் புலிகளின் பெயரிலான அங்கீகாரத்தைத் தமது அரசியல் இருப்புக்கும் லாபங்களுக்குமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக புலம்பெயர்ந்திருப்போர் புலிகளை மீட்டுருவாக்கம் செய்வதன் மூலமாகப் புலிகளின் பெயரிலான பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆக மொத்தத்தில் லாபங்களே இவர்களுடைய நோக்கம்.

ஆக இவர்களுக்குடைய நலன்களுக்காகப் புலி மீளெழுச்சிப் புனைவுகள் உண்டாக்கப்படுகின்றன.

புலிகள் தொடர்பாக ஏதாவது ஒரு துரும்பு இவர்களுக்குக் கிடைத்து விட்டால் போதும், அதை வைத்தே உலகத்தைப் புரட்டும் மாஜாயாலக்கதைகளை உருவாக்கி விடுவார்கள். துரும்பு கிடைக்காவிட்டாலும்கூட எதையாவது சொல்லி, ஏதோ ஒன்றை உருவாக்கி விடுவார்கள்.

இப்படியிருக்கும்போது சில நாட்களுக்கு முன்பு, சாவகச்சேரியில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புலிகளுடையது என்று சந்தேகிக்கப்படும் ஆயுதப் பொருட்கள் பெரிய கொண்டாட்டத்துக்குரியவையாகவே காண்பிக்கப்பட்டன.

இந்தச் செய்தி வந்தபோது ஏற்பட்ட பரப்பரப்புகளும் அரசியல் உரையாடல்களும் ஏராளம்.

‘பார்த்தீர்களா, புலிகள் இன்னும் தூங்காமலே இருக்கிறார்கள்?’ என்று ராஜபக்ஷக்கள் கூக்குரலிடத் தொடங்கி விட்டார்கள். ‘நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பரதூரமான காரியங்கள் நடக்கின்றன’ என்று முன்னாள் அமைச்சரும் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் ஊடகவியலாளர் மாநாட்டையே நடத்தினார். தமிழ் சிங்கள ஆங்கில ஊடகங்கள் எல்லாம் இதைப்பற்றிய செய்திகளையும் புலனாய்வு அறிக்கைகளையும் வெளியிட்டன.

இதற்கு நிகராகப் புலம்பெயர் சூழலிலும் தமிழர்கள் தங்களுடைய மேளங்களை உரத்து வாசிக்கத் தொடங்கினர். நல்லவேளையாக தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்புகள் உச்சமடைந்திருப்பதால் இந்தச் சேதி அங்கே பெரிதாக எடுபடவில்லை.

ஆனால், யதார்த்தத்தில் புலிகள் மீள எழுச்சியடைவது சாத்தியமில்லை. இதைக் கொழும்பு நன்றாகவே அறியும். கொழும்பு மட்டுமல்ல, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து வலுமிக்க சக்திகளுக்கும் புலிகளின் மீள் எழுச்சி சாத்தியமில்லை என்று நன்றாகத் தெரியும்.

அதைப்போல, பெரும்பாலான தமிழ் மக்களுக்கும் இது தெரியும். சிங்களவர்களுக்கும் இது விளங்கும். என்றாலும் எல்லோரும் விளங்காத மாதிரி நடந்து கொள்கிறார்கள். நடிக்கிறார்கள்.

ஆனால், புலிகளின் மீள் எழுச்சி பற்றிய இந்தக் கதைகளால் மெய்யாகவே பாதிக்கப்படுவதும் பதற்றமடைவதும் துக்கப்படுவதும் முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களே.

சாதாரண வாழ்க்கையிலே மீள்நிலைப்பட முடியாமல், பொருளாதார ரீதியாகவும் மனோரீதியாகவும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கும் இவர்கள் ஒரு நாள் பொழுதைக் கழிப்பதற்கே மிகச் சிரமப்படுகின்றனர்.

பலருக்குத் தொழிலில்லை, போதிய வருமாமனமில்லை. இதனால் தங்களுடைய குடும்பங்களைச் சீராக நிர்வகிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். பல பெண் போராளிகள் இன்னும் திருமணத்தை எட்டாமல், எதிர்காலத்தைக் குறித்துத் தீர்மானிக்க முடியாமல் உள்ளனர்.

போராட்டத்தில் இணைந்ததன் காரணமாக இளமையிலே கல்வியைத் தொடர முடியாமல் போனதால் கல்வி சார்ந்த தொழில் வாய்ப்பு இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை. அத்துடன் தொழில்களைக் கூட முறையாகப் பயிலக்கூடிய சூழலும் போராட்டத்தின்போது பலருக்குக் கிட்டவில்லை.

‘நாங்கள் பழகியதெல்லாம் சண்டை (போர்) தான். இதை வைச்சுக்கொண்டு இப்ப என்ன செய்ய ஏலும்?’ என்று ஒரு போராளி துக்கமாகக் கேட்டதை இங்கே நினைவுபடுத்திக்கொள்ளலாம். ஏனென்றால் இதுதான் இவர்களுடைய யதார்த்தம்.

இந்த நிலையில் புலிகளின் மீள் எழுச்சிக் கதைகள் இவர்களைக் கலங்க வைக்கின்றன. இந்தச் சேதிகளைத் தொடர்ந்து படைத்தரப்பின் கண்காணிப்புகளும் விசாரணைகளும் கைதுகளும் தங்களை நோக்கித் திரும்பக் கூடும் என்று அஞ்சுகிறார்கள்.

‘எல்லாம் முடிந்தது. இனிச் சோலி வேண்டாம் என்று இருந்தாலும் எப்படியோ எங்களுக்கு ஏதோ ஒரு பிரச்சினை வந்து கரைச்சல் தரும். அவர்களுக்கு இதெல்லாம் ஒரு விளையாட்டு. எங்களுக்கோ உயிர் போற வேதனைக்குரிய விசயம்’ என்று அழுகிறார் ஒரு பெண் போராளி.

இந்த மாதிரியான நிலை நிச்சயமாக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களின் உளநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பலரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற உணர்வோடு உள்ளனர். ஆனால், அதற்கான சாத்தியங்கள் எல்லோருக்கும் இல்லை. சிலர் இந்தச் சூழலை விட்டுப் போகவேண்டும் என்று வெளியேறியுள்ளனர். ஆனாலும் அப்படி வெளியேறியவர்களின் குடும்பங்கள் சிரமங்களையே எதிர்கொள்கின்றன.

‘எப்படி அவர் வெளியேறினார்? ஏன் வெளியேறினார்? இப்பொழுது எங்கே உள்ளார்? அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்?’ என்ற கேள்விகள் இவர்களுடைய குடும்பத்தினரை நோக்கிக் கேட்கப்படுகிறது. இதில் உச்சக்கட்டமாக, ‘இப்படி வெளியேறுவதற்கு எப்படி அதற்கான நிதி கிடைத்தது? அது புலிகளின் நிதியா? அல்லது புலம்பெயர்ந்தோர் அனுப்பிய நிதியா?’ என்றெல்லாம் கேட்கப்படுகிறது.

இதனால் வாழவும் முடியாது. சாகவும் முடியாது என்ற நிலையில் இந்த முன்னாள் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தத்தளிக்கின்றனர்.

இந்த நிலையில் புலிகளின் மீள் எழுச்சிப் புனைவுகள் இன்னும் தொடரத்தான் போகின்றன. அது பெருநன்மைச் சக்திகளின் நலனுக்கான பெருங்கதையாடலாக நீளும். இதற்கு முடிவு இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் நிச்சயம்.கருணாகரன்