இராணுவ பேரூந்தில் ஏற்றிச்சென்ற மகன் எங்கே? கிளிநொச்சியில் தாய் கதறல்
இறுதியுத்தத்தின்போது தன் கண்கள் முன்பாகஇராணுவத்தின் பேரூந்து ஒன்றில் ஏற்றி அழைத்துச்செல்லப்பட்ட தனது மகன் எங்கே என்று காணாமல் போனோர் ஆணைக்குழு முன்பாக கிளிநொச்சியைச் சேர்ந்த தாய் ஒருவர் கண்ணீர்மல்க கோரியுள்ளார்.
பரணகம ஆணைக்குழுவின் அமர்வு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது.இதற்கு சாட்சியம் அளிப்பதற்காக வருகைதந்திருந்த கிளிநொச்சி விவேகானந்தநகரைச் சேர்ந்த காணாமல் போன இராஜசட்னம் ஜெயராஜ் (காணமல் போகும் போது வயது 28) என்பவரின் தாயாரே இவ்வாறு கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
2009-05 ஆம் மாதம் திகதி சரியாக ஞாபகம் இல்லை எனது மகனை ஓமந்தையில் பேரூந்து ஒன்றினுள் கண்டேன் ஆனால் அதன் பின்னர் இதுவரைக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவே உயிருடன் இருக்கும் எனது மகனை மீட்டுத்தாருங்கள் என கிளிநொச்சியில் இன்று திங்கள் கிழமை காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன் தயார் ஒருவர் கண்ணீருடன் கோரியுள்ளார்.
முள்ளிவாய்காலில் இருந்து எங்களை இராணுவத்தினர் பேரூந்துகளில் ஏற்றி ஓமந்தைக்கு கொண்டு சென்றனர் அங்கு எங்களை (பொது மக்கள்) பதிவுகளை மேற்கொள்ள ஓரிடத்தில் அமர்த்தியிருந்தனர். என்னுடன் சேர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு இருந்தனர்.
இதன்போது பிரிதொரு சீரிபி பேரூந்துகளில் சில இளைஞர்கள் ஏற்றி வரப்பட்டு ஓமந்தையில் இறக்கி இராணுவத்தின் பேரூந்தில் ஏற்றினார்கள். அதன்போதே எனது மகனை நான் கண்டேன். அப்போது உடனடியாக எங்களின் அருகில் இருந்த இராணுவத்திடம் மகனை அழைத்துச்செலிகின்றார்கள் அவரை சென்று பார்க்கவேண்டும் எனக் கேட்ட போது இந்த இராணுவ சிப்பாய் ஒருவர் என்னை அடிக்க வந்ததோடு போய் இடத்தில் அமர்ந்துகொள்ளுமாறும், அவர்களை விசாரித்து விட்டு அனுப்பி விடுவார்கள் என்றும் தெரிவித்தார். இதுவே எனது மகனை இறுதியாக நான் கண்ட சந்தர்ப்பம்.
எனவே ஒமந்தையில் வைத்து நான் எனது கண்களால் கண்ட இராணு பேரூந்தில் அழைத்துச்சென்ற எனது மகன் எங்கே? அவர் இப்போத எங்கிருக்கின்றான்? தயவு செய்து கண்டறிந்து என்னிடம் சேர்த்துவிடுங்கள் என மன்றாடினார் விவேகானந்தகரைச்சேர்ந்த இந்த தாய்.
இதே போன்று எங்களுடன் இருந்த மேலும் சில தாய்மார்கள் எனது மகனை ஏற்றிய அதே பேரூந்தில் தங்களுடைய பிள்ளைகளை ஏற்றிச்செல்வதனையும் கண்டனர். அவர்கள் அப்போது என்னை போன்று இராணுவத்திடம் கேட்டனர் ஆனால் இராணுவம் என்னோடு நடந்துகொண்டது போன்றே அவர்களுடனும் நடந்துகொண்டனர் – என்றார்.